IPL 2025 MI Vs PBKS: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது உறுதியாகும்.
டாப் 2 இடங்கள் யாருக்கு?
போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு, யாருமே எதிர்பாராத அதிரடியான திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் அடுத்தடுத்து தோல்வியுற்றன. கடைசி இடங்களில் உள்ள அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு ஆட்சியளித்தன. இதன் காரணமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்ற அணிகளால், முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் தான், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் அணி, அடுத்தடுத்து கண்ட இரண்டு தோல்விகளால் எலிமினேட்டர் போட்டியை விளையாடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது உறுதியாகும்.
மும்பை - பஞ்சாப் மோதல்:
ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. தலா 13 போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணிகளும் தலா 8 வெற்றிகள் பெற்றுள்ளன. இருப்பினும் ஒரு போட்டியில் சமன் கண்டதால், 17 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் இரண்டாவது இடத்திலும், மும்பை அணி நான்காவது இடத்திலும் உள்ளன். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன், வலுவான ரன்ரேட் காரணமாக மும்பை அணி நேரடியாக முதல் இடத்திற்கு முன்னேறக்கூடும். ஒருவேளை நாளைய போட்டியில் பெங்களூரு வென்றாலும், இரண்டாவது இடம் மும்பைக்கு உறுதியாகிவிடும். மறுமுனையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றாலும், 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் உறுதியாகவிடும். இதனால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலம், பலவீனம்:
மும்பை அணியை பொறுத்தவரையில் கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியை கண்டுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து பிரிவுகளிலும் அந்த அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. தொடக்க வீரர்கள் வலுவான கூட்டணியை அமைத்துவிட்டால், நீளமான பேட்டிங் காரணமாக அந்த அணி பெரும் இலக்கை நிர்ணயிக்கவும் வல்லது, சேஸ் செய்யவும் வல்லது. பும்ரா, போல்ட் மற்றும் சாஹர் கூட்டணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பஞ்சாப் அணியும் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது. கடைசியாக விளையாடிய போட்டியில் பந்துவீச்சில் சொதப்பியதே அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. அதில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டால், பஞ்சாபிற்கும் இன்று வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
மும்பை - பஞ்சாப்: நேருக்கு நேர்
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 17 முறையும், பஞ்சாப் அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக மும்பை ஆதிக்கம் செலுத்தினாலும், கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் அணி வெற்றிகளை குவித்து வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிகபட்சமாக பஞ்சாப் 230 ரன்களையும், குறைந்தபட்சமாக மும்பை 87 ரன்களையும் சேர்த்துள்ளது.
மைதானம் எப்படி?
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் 7 போட்டிகளில் நடைபெற்றுள்ளன. அவற்றில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் என்பது 200 ஆக உள்ளது. முதலில் பேட்டிங் மற்றும் சேஸ் செய்த அணிகள் தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளன. பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக உள்ள இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது நல்ல முடிவாக இருக்கும். இன்றைய போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு ஏதும் இல்லை என்றும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
உத்தேச பிளேயிங் லெவன்:
பஞ்சாப் கிங்ஸ் (PBKS): பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ் (WK), ஷ்ரேயாஸ் ஐயர் (சி), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மதுல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்.
இம்பேக்ட் பிளேயர்: பிரவீன் துபே.
மும்பை இந்தியன்ஸ் (MI): ரியான் ரிக்கல்டன் (WK), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (சி), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, கர்ண் ஷர்மா.
இம்பேக்ட் பிளேயர்: ரோஹித் சர்மா.