ஐபிஎல் கிரிக்கெட்டிற்கே அடையாளமாக திகழ்பவர்களில் ஒருவர் தோனி. இந்திய கிரிக்கெட்டிற்காக டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று தந்த தோனி சென்னை அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று தந்துள்ளார்.
ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி:
இந்த நிலையில், இன்று குஜராத்துடனான வெற்றிக்கு பிறகு பேசிய தோனியிடம் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆடுவீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி ஒன்னும் அவசரம் இ்ல்ல. ஒவ்வொரு வருடமும் 50 சதவீதம் கூடுதலாக உழைக்க வேண்டியுள்ளது.
இது ஆட்டத்திறன் பற்றி மட்டுமல்ல. உங்களுக்கு எந்தளவு ஈடுபாடு, எந்தளவு உடல்தகுதி, உங்களால் அணிக்கு எந்தளவு பங்களிப்பு உள்ளது? போன்றவை பொறுத்தே உள்ளது. போதுமான நேரம் உள்ளது. ராஞ்சியில் வீட்டிற்கு சென்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. வீட்டிற்குச் சென்று இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்வேன். 2 மாதங்களுக்கு பிறகு முடிவு செய்யலாம். நான் முடித்து விட்டேன் என்றும் சொல்லவில்லை. மீண்டும் வருவேன் என்றும் சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆறுதல் தந்தாலும் கவலை:
தோனியின் இந்த அறிவிப்பு சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை தந்துள்ளது. அதேசமயம் தான் மீண்டும் வருவேன் என்றும் கூறவில்லை என்று அவர் கூறியிருப்பது அவர் ஓய்வு பெற உள்ளார் என்பதையே மறைமுகமாக குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.
மேலும், தோனி சிஎஸ்கே தனது அணியில் ஆடும் வீரருக்கும் தனக்கும் 25 வயது வித்தியாசம் இருப்பதை அறிந்தே பிறகே தனக்கு வயதானதை உணர்ந்தேன் என்றும் கூறினார். தோனி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உடற்தகுதி குறித்து இந்த தொடரில் அதிக முறை பேசியுள்ளார். மேலும், விக்கெட் கீப்பிங்கிலும் அவரால் முன்பு போல தாவி ஃபீல்டிங் செய்ய முடியவில்லை என்பது சில போட்டிகளில் காண முடிந்தது.
சோகத்தில் ரசிகர்கள்:
ஒரு அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இருக்கும்போது விக்கெட் கீப்பிங் செய்யும் உடற்தகுதி இருந்தால் மட்டுமே அணியில் நீடிக்க வைக்கும். தோனிக்கு 43 வயதாகியுள்ள நிலையில் அவருக்கு மூட்டு பிரச்சினையும் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
தோனியின் பேட்டி, அவரது உடற்தகுதி போன்ற பல காரணங்கள் அவர் அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் ஆடுவாரா? இல்லை பிறந்த நாளுடன் ஓய்வை அறிவிப்பாரா? என்ற கேள்வியையே எழுப்பியுள்ளது. இதனால், சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி தோனியின் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
தோனி சென்னை அணிக்காக மட்டுமின்றி ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார். இவர் மொத்தம் 278 போட்டிகளில் ஆடி 278 போட்டிகளில் 242 இன்னிங்சில் பேட்டிங் செய்து 5 ஆயிரத்து 439 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 24 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்துள்ளார்.