KL Rahul BCCI: அணிக்கான வீரர்களின் பங்களிப்பை கிரிக்கெட் நிர்வாகம் மறந்துவிடுவதாக, கே.எல். ராகுல் வேதனை தெரிவித்துள்ளார்.
கே.எல். ராகுல் வேதனை:
டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயணம் தொடங்கியுள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோரின் ஓய்வை தொடர்ந்து இந்திய அணி பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கான வீரர்களை அறிவித்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், அடுத்த தலைமுறை வீரர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார். ஆனால், அவரது கருத்துக்கு இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன கே.எல். ராகுல் முழுமையாக உடன்படவில்லை என்பதையே அவரது சமீபத்திய கருத்துகள் உறுதிபடுத்துகின்றன. அதேநேரம், அண்மை காலங்களில் அணிக்காக வீரர்கள் என்ன செய்தார்கள் என்பதை முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் மறந்துவிடுகிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.
”ஈசியா மறந்துட்றாங்க”
ஸ்கை கிரிக்கெட் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு கே. எல். ராகுல் வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அதன்படி, “என்னை நானே நிரூபித்துக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஏனென்றால் விளையாட்டு அப்படி தான் இருக்கும். உங்களால் போதும் என இருந்துவிட முடியாது. இது எனக்கானது மட்டுமல்ல, ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் அப்படி தான் இருக்கும். ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் திறம்பட செயல்பட வேண்டும். சர்வதேச வீரர்களுக்கு உள்ள சவால் அது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வீரர்கள் கூட இதை எதிர்கொள்வதை பார்க்கிறேன். ஆனால், கடினமான பகுதி என்பது அது அல்ல. அண்மை தொடர்களில் வீரர்கள் அணிக்காக என்ன செய்தார்கள் என்பதை முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள் மறந்துவிடுவது தான் கடினமானதாகும். அது தான் எனக்கு சவாலானதாக உள்ளது” என கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
எதுக்கு சார் மாற்றம்?
பிசிசிஐயின் இளம் வீரர்களி தேர்வு குறித்து பேசுகையில், “அடுத்த ஒருநாள் தொடர் எப்போது இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு ஒருநாள் போட்டிகள் விளையாட மொத்தம் 5 மாதங்கள் வரை ஆகலாம். அடுத்த 2027 உலகக் கோப்பைக்கான வீரர்களை தேடிக்கொண்டு இருக்கிறோம் என சிலர் கூறுவார்கள். இதுபோன்ற சில நேரங்களில் ஒரு வீரராக அமர்ந்து யோசிக்க வேண்டி இருக்கும். அதவாது, சில விஷயங்கள் நல்ல பலன் அளித்து கொண்டிருக்கும்போது அதில் ஏன் மாற்றங்கள் செய்ய வேண்டும்? அதற்குள் அடுத்த தலைமுறை இளம் வீரர் குறித்து ஏன் ஆலோசிக்க வேண்டும்? ஆனால் இது எனக்கானது மட்டுமல்ல, அனைத்து வீரர்களுக்கானது” என கே.எல். ராகுல் தெரிவித்து உள்ளார்.
ரோகித்தின் ஓய்வை தொடர்ந்து மற்றொரு மூத்த வீரருக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக, போதிய அனுபவம் கூட இல்லாத சுப்மன் கில் இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு தனது செயல்பாட்டால் பதில் அளிக்க வேண்டிய சூழலில் கில் இருக்கிறார்.