Vinesh Phogat: பேரிடி! போட்டியிடாமலே பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் வினேஷ் போகத் - ரசிகர்கள் அதிர்ச்சி
ஒலிம்பிக்கில் இன்று தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அபாரமாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று அவர் இறுதிப்போட்டியில் மாலை விளையாட இருந்தார். 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 50 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தை அமெரிக்க வீராங்கனை கைப்பற்றினார்.
பெரும் சோகம்:
நடப்பு ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை எந்த தங்கமும் வெல்லவில்லை. இந்த சூழலில், மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நேற்று அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
50 கிலோ எடைப்பிரிவு போட்டி என்பதால் எடை ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், அவர் 50 கிலோவிற்கும் அதிகமாக எடை இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, அவர் நேற்று இரவு முழுவதும் கண் விழித்து தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். ஆனாலும், அவர் 50 கிலோவை காட்டிலும் 100 கிராம் எடை அதிகளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகள் சொல்வது என்ன?
அவர் நாள் முழுவதும் உடற்பயிற்சி செய்து 2 கிலோ எடையை ஒரே இரவில் குறைத்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் இரவு முழுவதும் சைக்கிளிங், ஸ்கிப்பிங் என பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும், அவர் குறிப்பிட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. மல்யுத்த விதிப்படி போட்டி நடைபெறும் நாள் மற்றும் போட்டிக்கு முந்தைய நாள் போட்டி நடக்கும் எடை அளவிலே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடிக்கணக்கான ரசிகர்கள் சோகம்:
ஒலிம்பிக் வரலாற்றிலே மகளிர் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தய வீராங்கனை என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்திருந்தார். ஜப்பான் வீராங்கனை யூய் சுசாகி, உக்ரைன் வீராங்கனை மற்றும் கியூபா வீராங்கனை என அடுத்தடுத்து மிகப்பெரிய வீராங்கனைகளை வீழ்த்தி வினேஷ் போகத் முன்னேறினார். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எடை அதிகரிப்பு காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது இந்திய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.