(Source: ECI/ABP News/ABP Majha)
Paris Paralympics: மிரட்டிய தமிழர் மாரியப்பன் தங்கவேலு - பழைய பாராலிம்பிக் சாதனைகளை முறியடித்த இந்தியா
Paris Paralympics: டோக்யோ பாராலிம்பிக்கை காட்டிலும் அதிக பதக்கங்களை வென்று, பாரிஸில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.
Paris Paralympics: பாரிஸ் பாராலிம்பிக்கில் நேற்று ஒரே நாளில், இந்திய புதியதாக 5 பதக்கங்களை வென்றுள்ளது.
பாரிஸில் சரித்திரம் படைத்த இந்தியா:
பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில், அபாரமான திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி, இந்த பாராலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியா புதிய சரித்திரம் படைத்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்யோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்கள் வென்றது தான், ஒரு பாராலிம்பிக் எடிஷனில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்க எண்ணிக்கை ஆகும். அந்த சாதனை பாரிஸ் பாராலிம்பிக் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நாளின் முடிவில் இந்தியா மொத்தமாக 20 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதால், நமது நாட்டிற்கான பதக்கங்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.
ஒரே நாளில் 5 பதக்கங்களை வென்ற இந்தியர்கள்:
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்தியா 13 பதக்கங்களை வென்றுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5 பதக்கங்கள் வெல்லப்பட்டன. அதன்படி,
-
உயரம் தாண்டுதலில் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்
-
உயரம் தாண்டுதலில் டி63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
-
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் அஜீத் சிங் 65.62 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்
-
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுந்தர் சிங் 64.96 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
-
400 மீட்டர் டி20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம், டிராக் போட்டிகளில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தற்போது வரை 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 20 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த டோக்யோ பாராலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என, மொத்தம் 19 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.
Deepthi Jeevanji clinches her first #Paralympic medal bagging a Bronze with a timing of 55.82 seconds in the Women's 400m T20 final.
— ANI (@ANI) September 3, 2024
With this win, she became the 2nd Indian women's track athlete to clinch a medal at the #ParisParalympics2024. pic.twitter.com/SldyGlOaqZ
ஹாட்ரிக் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு:
பாஎராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவர், டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றார். இந்நிலையில் பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று, தனது ஹாட்ரிக் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.