Manu Bhaker:பாரீஸ் ஒலிம்பிக்.. சுதந்திர இந்தியாவில் முதல் முறை! புது சகாப்தம் படைத்த மனு பாக்கர்!
சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் நிகழ்த்தி இருக்கிறார்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிக பதக்கங்களை வென்று வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை முதல் பதக்கத்தை துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வென்றார். அதாவது 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார்.
இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கம்:
இந்நிலையில் இன்று(ஜூலை 30) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் கூட்டணி களமிறங்கியது. நேற்றைய தகுதிச்சுற்றில் 3வது இடத்தில் நிறைவு செய்த இந்த கூட்டணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட தகுதி பெற்றது. இந்த நிலையில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தென் கொரியாவின் ஓ ஏ ஜின் - லீ வோன்ஹு கூட்டணியை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் கூட்டணி முன்னிலையிலேயே இருந்தது. 2-2 என்று புள்ளிகள் இருந்த நிலையில், அடுத்தடுத்து 8-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ச்சியாக 4 ரவுண்ட்களை இந்திய அணி வென்றது. இருப்பினும் திடீரென கொரியா அணியின் எழுச்சியால் ஆட்டம் 10-6 என்ற நிலைக்கு வந்தது. ஆனால் 9வது ஷாட்டில் இந்திய அணி 20.5 புள்ளிகள் பெற்று 12-6 என்று முன்னிலை பெற்றது.பின்னர் 10வது ஷாட்டில் கொரியா 19.4 புள்ளிகள் பெற்ற நிலையில், இந்திய அணி 20.8 புள்ளிகள் பெற்று முன்னேறியது.
11வது ஷாட்டில் கொரியா 19.8 பெற்று கொரியா கைப்பற்றியது. தொடர்ந்து 12வது ஷாட்டில் கொரியா 21 புள்ளிகள் பெற்று முன்னேற்றம் கண்டது. இருந்தாலும் 14-10 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலையில் இருந்தது. இதன்பின் 13வது ஷாட்டில் இந்திய இணை வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர்:
முன்னதாக கடந்த 1990 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஆங்கிலோ இந்தியரான நார்மன் பிரிட்சர்ட்ஸ் தடகளத்தில் இரண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றதே சாதனையாக இருந்தது. இச்சூழலில் தான் சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் நிகழ்த்தி இருக்கிறார். அதேபோல் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு பிறகு ஒலிம்ப்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மனு பாக்கர் படைத்துள்ளார்.