ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்ற ஐ.பி.எல். போட்டிகளை காட்டிலும் இந்த ஐ.பி.எல். தொடரில் ரன்கள் மலை போல குவிக்கப்பட்டு வருகிறது. கடந்த தொடர்களில் 200 ரன்கள் சராசரியாக அடிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஐ.பி.எல். தொடரில் 250 ரன்கள் என்பதே மிக இயல்பாக அடிக்கப்பட்டு வருகிறது.


புது வரலாறு படைத்த பஞ்சாப்:


அவ்வாறு 250 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்படும் இலக்கை நோக்கி எதிரணிகளும் துரத்திச் செல்வதையும் காண முடிகிறது. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி நிர்ணயித்த 287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி 262 ரன்களை எட்டியது. அந்த போட்டியில் பெங்களூர் தோற்றாலும் மற்ற அணிகளுக்கு அது புது உத்வேகத்தை அளித்தது.


இந்த நிலையில், நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் 262 ரன்கள் என்று கொல்கத்தா அணி நிர்ணயித்த கடின இலக்கை பஞ்சாப் அணி 8 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பார்ஸ்டோ 48 பந்துகளில் 8 பவுண்டரி 9 சிக்ஸருடன் 108 ரன்களுடனும், ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 2 பவுண்டரி 8 சிக்ஸருடன் 68 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். பிரப்சிம்ரன் 20 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 54 ரன்கள் விளாசினார்.


பஞ்சாப்பின் வெற்றிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுவரை ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை வெற்றி பெறாத பஞ்சாப் அணி, ஐ.பி.எல். வரலாற்றிலே அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற வரலாற்றை படைத்தள்ளது.


இது நம்ம லிஸ்ட்லயே இல்ல:


நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தில் மொத்தம் 523 ரன்கள் எடுக்கப்பட்டதையும், 42 சிக்ஸர்கள் விளாசியதையும் பாராட்டி முதல்வன் படத்தில் மணிவண்ணன் இது நம்ம லிஸ்ட்லயே இல்ல என்று கொடுக்கும் ரியாக்‌ஷனை பதிவிட்டிருந்தது.






அதற்கு பஞ்சாப் அணி அவர்களது எக்ஸ் பக்கத்தில் முதல்வன் படத்தில் அர்ஜூன் தான் அரசியலுக்கு வருவதாக கையைத் தூக்கி உறுதியளிக்கும் காட்சியை சென்னை அணிக்கு பதிலாக தந்துள்ளனர். இரு அணிகளும் வரும் மே 1ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேருக்கு நேர் மோத உள்ளன. நிச்சயம் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தானை பழிவாங்குமா லக்னோ? இன்று இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை


மேலும் படிக்க: KKR vs PBKS Match Highlights: பேர்ஸ்டோவ் சதம்; 262 ரன்கள் இலக்கை எட்டி KKR-ஐ 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப்