17ஆவது ஐபிஎல் தொடரின் 43 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதிக்கொண்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. டாஸ் என்ற மும்பை அணி சிறப்பாக பந்து வீசி டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் களமிறங்கியது. 


ஆனால் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் மெகர் பவர் பிளேவில் தனது ருத்ரதாண்டவ ஆட்டத்தினை வெளிப்படுத்தியதால் பனியன் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 15 பந்தில் தனது அரைசதத்தினை எட்டிய மெக்கர்க் தொடர்ந்து அதிரடியாக பவுண்டரிகளை விளாசி வந்தார். டெல்லி அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் போரல் நிதானமாகவே விளையாடினார். மும்பை அணியின் தரமான பந்து வீச்சாளரான பும்ராவின் ஓவரில் மெக்கர்க் 18 ரன்கள் குவித்து மிரட்டினார். டெல்லி அணி பவர்ப்ளே முடிவில் 92 ரன்களும், 6.4 ஓவரில் 100 ரன்களையும் எட்டியது. 


டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்தினை கட்டுப்படுத்த தெரியாமல் மும்பை அணி திணறியது. ஒருவழியாக ஆட்டத்தின் 8வது ஓவரை வீசிய பியூஷ் சாவ்லா பந்தை சிக்ஸருக்கு விளாச முயற்சி செய்த மெக்கர்க் தனது விக்கெட்டினை நபியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வெறும் 27 பந்துகளை எதிர்கொண்ட மெக்கர்க் 84 ரன்கள் குவித்திருந்தார். அடுத்த களமிறங்கிய ஷாய் ஹோப் தொடக்க வீரர் அபிஷேக் போரல் உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். 


மும்பை அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி பந்தில் போரல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேற, அடுத்து வந்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டத்தில் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார். போட்டியின் 14வது ஓவரில் லூகி வுட் வீசிய பந்தினை ஷாய் ஹோப் தூக்கி அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்தார். ஆனால் ஒவர் வெறும் 17 பந்தில் 41 ரன்கள் குவித்திருந்தார். தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தினைக் குறைக்காத டெல்லி அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்தது. 


களத்தில் இருந்த ஸ்டப்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் கூட்டணி மும்பை அணியின் பந்து வீச்சினை தொடர்ந்து சிதறடித்தனர். குறிப்பாக ஆட்டத்தின் 18வது ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ஸ்டப்ஸ் அந்த ஓவரில் ஐந்து பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி அமர்க்களப்படுத்தினார். 


இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவாகியுள்ளது.