FIFA World Cup 2026 Qualifier:  ஒடிசாவில் உள்ள புவனேஷ்வர் காலிங்கா கால் பந்து மைதானத்தில் FIFA World Cup தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. அதில் இன்று அதாவது நவம்பர் 21ஆம் தேதி இந்தியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மோதிக் கொண்டன. இரு நாடுகளும் தகுதி சுற்றில் களமிறங்கியுள்ள அணிகளில் ‘ஏ’ குழுவில் இடம் பெற்றுள்ளது. இந்த குழுவில் ஆஃப்கானிஸ்தான், மற்றும் குவைத் என மொத்தம் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. 


இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பலமான கத்தார் அணியை இந்திய அணி வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டி தொடங்கிய 4வது நிமிடத்தில் கத்தார் அணி முஸ்தப்பா கரீல் மஸ்தல் போட்டியின் முதல் கோலினை அடித்தார். இதனால் போட்டியின் தொடக்கமே இந்திய அணிக்கு பின்னடைவானது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட கத்தார் அணி தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்துகொண்டே இருந்தது. ஆனால் இந்திய அணி கோல் அடிப்பதை விடவும் கத்தார் அணி மேற்கொண்டு கோல் அடிப்பதை தடுக்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தது. 


கோலுக்காக இந்திய அணி முயற்சி செய்ததே மொத்தம் 7 முறைதான். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த கத்தார் அணி இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடித்தது. இந்த கோலை அல்மோஸ் அலி அடித்தார். இரண்டாவது கோலை அடித்தபோதே கத்தார் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. போட்டியின் நேரம் முடியும் போது கத்தார் அணியின் யூசஃப் மூன்றாவது கோலை அடித்தார். இதனால் போட்டியில் கத்தார் அணி இந்திய அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் மிகச் சிறப்பாக ஆடியது. போட்டி முடிவில்  3-0 என்ற கணக்கில் கத்தார் அணி வெற்றி பெற்றது. 


இந்த போட்டியில் கத்தார் அணி 20 முறை கோல் அடிக்க முயற்சி செய்தது. கத்தார் அணி வீரர்கள் அனைவரும் இணைந்து போட்டி முழுவதும் சேர்த்து மொத்தம் 416 பாஸ்கள் செய்துள்ளனர். ஆனால் இந்திய அணி வீரர்கள் 363 பாஸஸ் செய்தனர். கார்னர் கிக் வாய்ப்புகள் இந்திய அணி மொத்தம் 3 முறைதான் கிடைத்தது. ஆனால் கத்தார் அணிக்கு மொத்தம் 11 கார்னர் கிக் வாய்ப்புகள் கிடைத்தன. 


இந்த தோல்வியினால் இந்திய அணி குழு ‘ஏ’ பிரிவு புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றி மூலம் கத்தார் அணி முதல் இடத்தில் உள்ளது. கத்தார் அணி இதுவரை களமிறங்கிய இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 11 கோல்கள் அடித்துள்ளது. கத்தார் அணிக்கு எதிராக ஒரு கோல் அடிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்தார் அணி கோல் கணக்குகளில் மொத்தம் 10 கோல்கள் முன்னிலையில் உள்ளது.