இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 சர்வதேச தொடர் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 


முதன்முறையாக டி20 தொடர்:


இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஐசிசி நடத்தும் போட்டிகள், ஆசிய போட்டிகளில் மட்டுமே இதுவரை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் வெள்ளை பந்து அதாவது வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடர் இதுவரை விளையாடப்படவில்லை. 


2024 ஜனவரியில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா நடத்துகிறது. தொடரின் முதல் டி20 போட்டி ஜனவரி 11ம் தேதியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டி ஜனவரி 14 மற்றும் ஜனவரி 17ம் தேதியும் நடைபெறும். மொஹாலி, இந்தூர் மற்றும் பெங்களூரு ஆகியவை முறையே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிக்கான மைதானங்களாக உறுதி செய்யப்பட்டுள்ளன.






இரு அணிகளும் பல ஏசிசி மற்றும் ஐசிசி போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருந்தாலும், தனிப்பட்ட முறையில் பல போட்டிகள் கொண்ட ஒயிட்-பால் தொடரில் மோதுவது இதுவே முதல் முறை. இரு அணிகளும் இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் சந்தித்துள்ள நிலையில், அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


தற்போது இரு அணிகளும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. இந்த தொடருக்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 


இதுவே முழுமையான அட்டவணை 


முதல் டி20 போட்டி - ஜனவரி 11, மொஹாலி
இரண்டாவது டி20 போட்டி - ஜனவரி 14, இந்தூர்
மூன்றாவது டி20 போட்டி- ஜனவரி 17, பெங்களூரு. 


உலகக் கோப்பை 2023ல் ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு: 


ஒருநாள் உலகக் கோப்பை 2023ல் ஹாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 9 லீக் ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்று அசத்தியது. மேலும், அந்த அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்து உலகக் கிரிக்கெட் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுத்து கொண்டது. உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.


அதேசமயம், ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும், நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இதன்மூலம், இதுவரை கலந்துகொண்ட உலகக் கோப்பையில் இந்த உலகக் கோப்பை ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறப்பானதாக அமைந்தது. 


இந்த உலகக் கோப்பையில் நெதர்லாந்தை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததன் மூலம் அந்த அணியின் அரையிறுதி கனவு வெறும் கனவாய் போனது.