வாழ்வா, சாவா என்ற கேள்வியுடன் உலகக் கோப்பை லீக் போட்டியின் 2-வது ஆட்டத்தில் களமிறங்கிய அர்ஜென்டீனா அணி, 2-0 என்ற கோல்கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தியது. வழக்கம்போல், இந்த ஆட்டத்திலும் ஒரு கோல் அடித்து, அணியின் வெற்றிக்கு வழிகாட்டினார் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி.
கத்தாரில் நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட அர்ஜென்டீனா அணி, லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில், செளதி அரேபிய அணியுடன் தோல்வி அடைந்தது. இதனால்,இரண்டாவது லீக் ஆட்டத்தில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில், மெக்ஸிகோ அணிக்கு எதிராக அர்ஜென்டீனா அணி களமிறங்கியது.
இதனால், கத்தாரின் தோஹா நகரின் லுசைல் அரங்கத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும், உலகம் முழுவதும் பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் ஓடிடி-களில் கோடிக்கணக்கான ரசிகர்களும் அர்ஜென்டீனா - மெக்ஸிகோ ஆட்டத்தைக் காண்பதற்குக் குவிந்திருந்தனர்.
ஆட்டம் தொடங்கியவுடன், அனுபவம் வாய்ந்த இரு அணிகளும் கோல் அடிக்க பெரிதாக முயற்சிக்கவில்லை. குறிப்பாக, அர்ஜென்டீனா அணியினர், மெக்ஸிகோ அணியின் பலவீனத்தைப் பயன்படுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்தனர். ஆனால், முதல் பாதியில் மெக்ஸிகோ அணியினர், 20 நிமிடத்திற்குப் பிறகு கோலடிக்க தீவிரமாக இறங்கினர். அவர்களின் அனைத்து முயற்சிகளையும் அர்ஜென்டீனாவின் கோல்கீப்பர் டி மார்டினஸ் தடுத்து நிறுத்தினர்.
அசத்திய மெஸ்ஸி:
2-வது பாதி ஆட்டம் தொடங்கியவுடன், அர்ஜென்டீனா அணி, டாப் கியரில் ஆட்டத்தைத் தொடங்கியது. குறிப்பாக, நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, அதிரடி காட்டத் தொடங்கினார். ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில், இடதுபுறத்தில் இருந்து சிறப்பாக டீ மரியாக பாஸ் செய்த பந்தை லாவகமாக கோல் கம்பம் அருகே தட்டிச் சென்ற மெஸ்ஸி, தமது ஸ்டைலில் முதல் கோலை அடித்து, அர்ஜென்டீனாவை பெருமூச்சு விடச்செய்தார். மெஸ்ஸி கோல் அடித்ததும், ஒட்டுமொத்த அரங்கமும், மெஸ்ஸி, மெஸ்ஸி என்ற குரலோசையில் மூழ்கியது எனக் கூறலாம்.
2-வது கோலடித்த இளம் நட்சத்திரம்:
மெஸ்ஸியின் முதல் கோலுக்குப் பிறகு, அர்ஜென்டினாவின் ஆட்டம் சூடுபிடித்தது. மெக்ஸிகோவின் கோல் கம்பத்தை, இடதுபுறத்தில் டீ மரியாவும், வலதுபுறத்தில் மார்டினஸ்ஸும் ரோட்ரிகஸ்ஸும் தொடர்ந்து முன்னேறி வந்தனர். இதனால் எந்த நேரத்திலும் 2-வது கோலை அர்ஜென்டீனா அடிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். அதற்கேற்ப, ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில், மாற்று வீரராக 2-வது பாதியில் களமிறங்கிய என்ஸோ பெர்னாண்டஸ் கோலடித்து, அர்ஜென்டீனாவின் வெற்றியை உறுதி செய்தார்.
வீணான மெக்ஸிகோவின் முயற்சிகள்:
முதல் பாதியில் தடுப்பாட்டம் விளையாடிய மெக்ஸிகோ, 2-வது ஆட்டத்தில் அதிரடியாக விளையாட முயற்சித்தது, குறிப்பாக, முன்னணி கள வீரர்களான லோஸ்னாவும் வேகாவும் கோலடிக்க, பிரம்ம பிரயத்தனம் செய்தனர். ஆனால், கடைசிவரை, அவர்களின் பல முயற்சிகளை, அர்ஜென்டீனாவின் கோல்கீப்பர் D. மார்டினஸ் தடுத்து நிறுத்தினார். அவருக்குப் பக்கபலமாக, அர்ஜென்டீனாவின் பின்கள வீரர்களும் சிறப்பாக விளையாடினர். 90 நிமிட ஆட்ட நேரம் முடிந்தவுடன், கூடுதலாக வழங்கப்பட்ட 6 நிமிடத்திலும் மெக்ஸிகோவின் முயற்சிகள் வீணாகின.
ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டீனா:
ஆட்டத்தில் 59 சதவீதம் அர்ஜென்டீாவிடமும் 41 சதவீதம் பந்துகளின் மெக்ஸிகோ வசமும் இருந்தன. அதேபோல், நேற்றைய ஆட்டத்தில் 528 முறை அர்ஜென்டீனா வீரர்கள் பாஸ் செய்து, தங்களது ஆதிக்கத்தைக் காட்டினர். மெக்ஸிகோ அணி, 370 பாஸ்களை மட்டுமே செய்தனர். இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையில், மீண்டும் கோப்பையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது அர்ஜென்டீனா.
அர்ஜென்டீனாவின் கால் இறுதி வாய்ப்புகள் எப்படி?
லீக் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் செளதி அரேபியாவிடம் தோற்ற அர்ஜென்டீனா, இரண்டாவது ஆட்டத்தில் மெக்ஸிகோவை வென்றுள்ளது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதி, மூன்றாவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் போலந்துடன் மோதுகிறது அர்ஜென்டீனா. இந்த ஆட்டத்தில் வென்றால், கால் இறுதிக்கு எளிதாகச் சென்றுவிடும். போட்டி டிராவில் முடிந்தால்கூட அர்ஜென்டீனாவுக்கு கால் இறுதி வாய்ப்புகள் அதிகம். ஆனால் தோற்கக்கூடாது என்பது மிக முக்கியம். தற்போதுள்ள ஃபார்மினைப் பார்க்கும்போது, கால் இறுதிக்கு அர்ஜென்டீனா தகுதிப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.