IND Vs ENG Test Jaiswal: இங்கிலாந்து அணி உடனான ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் மூலம், 5 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது.
ஜெய்ஸ்வாலை விளாசும் ரசிகர்கள்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி, ஹெடிங்லே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெய்ஸ்வால், கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் அபாரமான சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஆனால், இந்திய வீரர்கள் கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விடாமல் இருந்து இருந்தால், முதல் இன்னிங்ஸில் குறைந்தது 150 ரன்களாவது முன்னிலை பெற்றிருக்க முடியும் என ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஜெய்ஸ்வால் மட்டுமே 3 கேட்ச் வாய்ப்புகளை விட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது எனவும் சாடி வருகின்றனர்.
அட்டாக மோடில் சச்சின்
மூன்றாவது நாளில் தேநீர் இடைவெளிக்கு முன்பே, இந்திய அணி மொத்தமாக 6 கேட்ச் வாய்ப்புகளை பறிகொடுத்தது. 2019ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய 5 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிடுவது இதுவே முதல்முறை என தரவுகள் தெரிவிக்கின்றன. ஜெய்ஸ்வால் தவறவிட்ட 3 கேட்ச்சுகளும், பும்ராவின் பந்துவீச்சில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தவறிய கேட்சுகள் பிடிக்கப்பட்டு இருந்தால், முதல் இன்னிங்ஸில் அவர் மட்டுமே 9 விக்கெட்டுகளை பெற்றிருக்க முடியும். இதனை குறிப்பிட்டு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும், இந்திய அணியீன் ஃபீல்டிங்கை விமர்சித்துள்ளார்.
கோட்டைவிட்ட ஜெய்ஸ்வால்..
இரண்டாவது நாளின் பிற்பகுதியில் இங்கிலாந்து வீரர் டக்கெட் 15 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் தவறவிட, அவர் 62 ரன்களை சேர்த்தார். ஓலி போப் 60 ரன்கள் எடுத்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை இழக்க, அவர் 106 ரன்கள் குவித்தார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான ஹாரி ப்ரூக் 83 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பையும் ஸ்லிப்பில் இருந்த ஜெய்ஸ்வால் தவறவிட்டார். இதனால் அவர் மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கையில் என்ன வெண்ணெய் தடவியிருக்கிறாரா? ஸ்லிப்பில் அவரை நிறுத்தக் கூடாது என்று சாடி வருகின்றனர். இதுபோக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு சில கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டனர். பும்ரா பந்துவீச்சில் மட்டும் 4 கேட்ச் வாய்ப்புகள் வீணாய்போனது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடைசி கட்டத்தில் ஆபத்பாந்தவனாய் வந்த பும்ரா தான் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்தை ஆல்-அவுட்டாக்கினார்.