Ind Vs Eng Test KL Rahul: இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் கே.எல். ராகுல், தமிழக வீரர் சாய் சுதர்ஷனுடன் தமிழில் உரையாடினார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹெடிங்லேவில் நடைபெறும் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தொடர்ந்து, கில் தலைமையிலான அணி 6 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அதன்படி, மூன்றாவது நாள் முடிவில், இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை சேர்த்து 96 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கே.எல். ராகுல் 47 ரன்களுடனும், கில் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
அணியை மீட்ட ராகுல் - சாய் சுதர்ஷன் காம்போ:
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து, அறிமுகப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக்-அவுட் ஆன சாய் சுதர்ஷன் களமிறங்கினார். இந்த முறை நிதானமாகவும், பொறுப்புடன் செயல்பட்டார். கே.எல். ராகுலுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இந்த கூட்டணி இரண்டாவது விக்கெட்டிற்கு 66 ரன்களை சேர்த்தது. 48 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து இருந்தபோது, பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் க்ராவ்லியிடம் கேட்ச் கொடுத்து சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தார்.
தமிழில் பேசிய ராகுல்:
இதனிடையே, சாய் சுதர்ஷனுடன் சேர்ந்து பேட்டிங் செய்யும்போது கே.எல். ராகுல் தமிழில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், மைதானத்தில் பந்து நன்கு பவுன்ஸ் ஆகிறது என்பதை சுதர்ஷனுக்கு தெரிவிக்கும் விதமாக, “நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி” என கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராகுல் அண்டை மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை கேட்டு உணர்ந்த சாய் சுதர்ஷன், பொறுப்புடன் விளையாடி இக்கட்டான சூழலில் ரன் சேர்த்து அணிக்கு பங்காற்றினார்.