நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது.


இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஆனால், ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, டாஸ் போடப்பட்டது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.




இதையடுத்து, இந்திய இந்த போட்டியிலும் முதலில் பேட் செய்ய களமிறங்கியது. இந்தியாவின் பேட்டிங்கை கேப்டன் ஷிகர்தவானும், சுப்மன்கில்லும் தொடங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் சுப்மன் கில் அதிரடியாகவே ஆடினார். 4.5 ஓவர்களில் இந்திய அணி 22 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதன்காரணமாக ஆட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டது.






ஏற்கனவே மழையால் டாஸ் போடுவதில் தாமதமான நிலையில், இந்தியாவின் பேட்டிங்கின்போது மழை குறுக்கிட்டிருப்பது ரசிகர்களை வெறுப்படையச் செய்துள்ளது. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக தீபக்ஹூடாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும். இவர்களுடன் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பண்ட், சூர்யகுமார்யாதவ், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப்சிங், சாஹல் களமிறங்கியுள்ளனர்.




 நியூசிலாந்து அணியில் பின் ஆலன், கான்வே, வில்லியம்சன், மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், சான்ட்னர், ப்ரேஸ்வேல், ஹென்றி, சவுதி, பெர்குசன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை வெல்வதற்கான போட்டியில் நீடிக்கும். இல்லாவிட்டால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும். நியூசிலாந்து அணி அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியாத அணியாக உலா வருகிறது.


அவர்களது வீறுநடைக்கு இந்திய அணி முட்டுக்கட்டை போடுமா? அல்லது நியூசிலாந்தின் வீறுநடை இன்றும் தொடருமா? என்று என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.