"அது சாண்டா கிஃப்ட்…", தென்னாபிரிக்க கேப்டனை சீண்டிய நாதன் லயன்… சூடுபிடித்த பாக்சிங் டே டெஸ்ட்!
இந்த பரபர போட்டியின் முதல் நாளில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் எல்கர் போலண்ட் வீசிய பந்தில் திணற, நாதன் லயன் வார்த்தைகளால் எல்கரை சீண்டியது ஆட்டத்தை சூடுபிடிக்கச் செய்தது.
தென் ஆப்பிரிக்காவுடன் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை விளையாடிக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் நாதன் லயன் முதல் நாளில் 'சாண்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா)' -ஐ இழுத்து தனது வாய் சண்டையை காட்டி ஆட்டத்தில் பரபரப்பை கூட்டிய விடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே நடைபெற்றுவரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டாப் ஆர்டரை குலைத்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மதிய உணவுக்கு முன் ஐந்து விக்கெட்டை வீழ்த்தி உற்சாகமான தொடக்கத்தைக் கண்டனர். அதன் பின்னர் 189 ரண்களுக்கு ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்க அணி. கேமரூன் க்ரீன் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட் எடுக்க, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் மற்றும் நாதன் லயன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த பரபர போட்டியின் முதல் நாளில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டீன் எல்கர் போலண்ட் வீசிய பந்தில் திணற, நாதன் லயன் வார்த்தைகளால் எல்கரை சீண்டியது ஆட்டத்தை சூடுபிடிக்கச் செய்தது.
திணறிய எல்கர்
இது இன்னிங்ஸின் 13வது ஓவரின் முதல் பந்தில் நடந்தது. போலண்ட் ஒரு பேக்-ஆஃப்-லெங்த் டெலிவரியை கச்சிதமாக வீச, எல்கர் அதனை எப்படியோ தடுக்க ஆனாலும் பந்து உருண்டு ஸ்டம்பில் சென்று மோதியது. மெதுவாக மோதியதால் பெயில் விழவில்லை. விழுந்திருந்தால் எல்கர் நான்கு பந்துகளில் போலண்டின் இரண்டாவது விக்கெட்டாக மாறி இருப்பார். தென்னாப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர் சரேல் எர்வியை அதற்கு முன் அவர் வீசிய ஓவரான 11வது ஓவரில் வெறும் 18 ரன்களில் வீழ்த்தினார்.
லயன் செய்த ஸ்லெட்ஜிங்
போலண்ட் பந்துவீசும்போது பாயிண்ட் திசையில் நின்றிருந்த லயன், எல்கரிடம் நடந்து சென்று கூறினார். "அது உங்களுக்கு சாண்டா கொடுத்த கிஃப்ட் என்று நான் கருதுகிறேன்.... சாண்டா தாமதமாக வந்துருக்காருன்னு நினைக்குறேன்." என்றார். பாக்சிங் டே டெஸ்ட் என்பது கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் தொடங்கும் டெஸ்ட் போட்டியாகும். கிறிஸ்துமஸ் தினத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா (சாண்டா) அனைவருக்கும் பரிசு கொடுப்பார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் ஸ்டம்பில் பந்து பட்டும் விழாமல் இருந்தது அவருக்கு சாண்டா கொடுத்த கிஃப்ட் என்று கலாய்த்தார்.
"He's been a good boy!"
— cricket.com.au (@cricketcomau) December 26, 2022
Fortune for Dean Elgar #AUSvSA pic.twitter.com/o4gUrixOQl
பதில் தந்த எல்கர்
லயன் மேலும் பேசுவதற்கு முன்பு எல்கர் "நான் ஒரு நல்ல பையனாக இருப்பதால் கொடுத்திருப்பார்" என்று திருப்பித் தாக்கினார். “ஒருபோதும் இல்லை. நீங்கள் ஒருபோதும் நல்லவர் பட்டியலில் இல்லை" என்று கருத்து தெரிவித்து சென்றார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நாதன் லயன். இது நடந்து சிறிது நேரத்திற்குப் பிறகு, எல்கர் போலண்ட் வீசிய பந்தில் ஒரு பவுண்டரி அடித்து 5000 டெஸ்ட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக சில ஓவர்களில் ரன் அவுட் ஆனார். அவர் 68 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன் எடுத்திருந்த நிலையில் முதல் செஷன் முடிந்தது. மதிய உணவுக்கு முன் 5 விக்கெட்டுகள் வீழ 117 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிய அணியை கேமரூன் க்ரீன் அபாரமான பந்து வீச்சால் ஒட்டுமொத்தமாக 189 ரன்களில் சாய்த்தார். கபாவில் நடந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா தொடரை சமன் செய்யும் நோக்கில் விளையாடி வருகிறது.