2021ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவிற்கு வர உள்ளது. இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை அதிகமாக லைக் செய்யப்பட்ட பதிவுகள், ரீட்வீட் செய்யப்பட்ட பதிவுகள் போன்றவை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக விளையாட்டு தொடர்பான பதிவுகளுக்கான தரவுகளும் தற்போது வெளியாகியுள்ளன. 


அதன்படி 2021ஆம் ஆண்டு முழுவதும் ட்விட்டரில் பதிவிடப்பட்ட விளையாட்டு பதிவுகளில் மிகவும் அதிகமாக லைக் மற்றும் ரீட்வீட் செய்யப்பட்ட பதிவு விராட் கோலியின் பதிவுதான். அதாவது இந்தாண்டு ஐபிஎல் தொடரின் போது அக்டோபர் 10-ஆம் தேதி இந்திய கேப்டன் விராட் கோலி முன்னாள் கேப்டன் தோனியை புகழ்ந்து ஒரு பதிவை செய்திருந்தார். அதில், “And the king is back… கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த ஃபினிசர். இன்று அவருடைய ஆட்டத்தால் என்னை நாற்காலியின் நுனியிலிருந்து குதிக்க வைத்து விட்டார்” எனப் பதிவிட்டிருந்தார்.






ஐபிஎல் தொடரில் அக்டோப்டர் 10-ஆம் தேதி நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற 173 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த சமயத்தில் டாம் கரண் வீசிய ஓவரில் கூலாக விளையாடிய தோனி 3 பவுண்டரிகள் அடித்து சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அதன்பின்பு விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பதிவை செய்திருந்தார். 


இந்த விராட் கோலியின் இந்த ட்வீட் தான் இந்தாண்டு அதிகம் லைக் மற்றும் ரீட்வீட் செய்யப்பட்ட பதிவு என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் உலகளவில் இந்தாண்டு அதிகம் பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக ட்விட்டரில் அதிகமாக பதிவிட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு ஐபிஎல், 2021 டி20 உலகக் கோப்பை, பாராலிம்பிக் மற்றும் யுரோ கோப்பை ஆகியவை இடம்பெற்றுள்ளன. 


அதேபோல் இந்தாண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட இந்திய விளையாட்டு வீரராக விராட் கோலி முதலிடம் பிடித்தார். அவருக்கு பிறகு தோனி, சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்தாண்டு ட்விட்டரில் அதிகமாக பேசப்பட்ட இந்திய ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகள் பட்டியலில் பி.வி.சிந்து முதலிடத்தை பிடித்தார். அவருக்கு அடுத்தப்படியாக நீரஜ் சோப்ரா மற்றும் பஜரங் புனியா இருந்தனர். வழக்கம் போல் ட்விட்டர் தளத்தில் அதிகமாக பேசப்பட்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்துள்ளது. அதற்கு அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இடத்தை பிடித்துள்ளன.  


மேலும் படிக்க: ‛இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க பில்லி பவுடன்?’- வீடியோவை வெளியிட்டு கிண்டலடித்த சச்சின்!