Virat Kohli Record: ஒற்றை சதம்... இத்தனை சாதனைகளா...? வரலாறு மேல் வரலாறு படைக்கும் விராட்கோலி...!
இலங்கை அணிக்கு விளாசிய சதம் மூலம் விராட்கோலி பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக அசாம் மாநிலம் கவுகாத்தியில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு சுப்மன்கில் – ரோகித் ஜோடி சிறப்பான தொடக்கத்தை தர, இந்திய வீரர் விராட்கோலி அபாரமாக ஆடி சதம் விளாசினார்.
விராட்கோலி இன்று விளாசிய சதம் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக, கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் அடித்துள்ள சதங்களில் 20 சதங்கள் உள்நாட்டில் அடிக்கப்பட்டவை. விராட்கோலி இன்று அந்த சாதனையை சமன் செய்துள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர் இலங்கை அணிக்கு எதிராக 84 போட்டிகளில் இதுவரை 8 சதங்களை ஒருநாள் போட்டியில் விளாசியிருந்தார். விராட்கோலி 48 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர் சொந்த நாட்டில் அடித்த 20 ஒருநாள் போட்டி சதங்கள் 160 இன்னிங்சில் வந்தது ஆகும். விராட்கோலி 99 இன்னிங்சில் 20 சதங்களை விளாசி அசத்தியுள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர், விராட்கோலி ஆகியோருக்கு பிறகு சொந்த நாட்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரராக 14 சதங்களுடன் ஹம்லா உள்ளார்.
- ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 12,500 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் விராட்கோலி இன்றைய போட்டியில் படைத்துள்ளார்.
- சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை சமன் செய்து வரும் விராட்கோலி ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் தலா 9 சதங்களை விளாசியுள்ளார. சச்சின் டெண்டுல்கரும் அந்த அணிகளுக்கு எதிராக தலா 9 சதங்களை விளாசியுள்ளார்.
-
விராட்கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரத்து 584 ரன்களுடன் உள்ளார். இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே 12650 ரன்களுடன் உள்ளார். விராட்கோலி இந்த தொடரிலே ஜெயவர்தனே சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஃபார்ம், சதம் அடிக்காதது, கேப்டன்சி என பல விமர்சனங்களை எதிர்கொண்ட விராட்கோலி மீண்டும் தன்னுடைய இயல்பான ஆட்டத்திற்கு திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விராட்கோலிக்கு தற்போது 34 வயதுதான் ஆகிறது. அவரது உடல்தகுதிக்கும், ஆட்டத்திறனுக்கும் அவர் இன்னும் குறைந்தது 4 ஆண்டுகள் வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். அதனால் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது.
மேலும் படிக்க:IND vs SL 1st ODI: 'கிங்' கோலி மிரட்டல் சதம்... சுப்மன், ரோகித் அபாரம்.. 374 ரன்கள் இலக்கை எட்டிப்பிடிக்குமா இலங்கை..?
மேலும் படிக்க: Watch Video: ஏன் அழுற... வா போட்டோ எடுக்கலாம்.. சிறுவனின் கன்னத்தை கிள்ளி அழைத்த ரோஹித் ஷர்மா.. வைரல் வீடியோ!