Sri Lanka Test Captain: இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டனாக இனி தனஞ்சய் டி சில்வா.. புதிய மாற்றத்தை அறிவித்த வாரியம்..!
இலங்கை கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கேப்டன் பதவியை தனஞ்சய டி சில்வாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்த தகவலை தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை தோல்வி, ஒருநாள் உலகக் கோப்பை தோல்வி என மோசமான ஆட்டத்தால் பொலிவை இழந்துள்ள இலங்கை கிரிக்கெட் தற்போது புது அவதாரம் எடுத்து வருகிறது. இலங்கை கிரிக்கெட்டின் சமீபத்திய முகத்தை மாற்றும் முயற்சியில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மூன்று வடிவங்களுக்கும் மூன்று கேப்டன்களை நியமனம் செய்துள்ளது.
அதன்படி, டி20 மற்றும் ஒருநாள் இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்த தசுன் ஷனகாவை நீக்கி ஒருநாள் போட்டிகளின் பொறுப்பை குஷால் மெண்டிஸிடமும், டி20 போட்டிகளின் பொறுப்பை வனிந்து ஹசரங்காவிடம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து, தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கேப்டன் பதவியை தனஞ்சய டி சில்வாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்த தகவலை தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sri Lanka New Captains for All 3 formats!🇱🇰🏏
— Cricket insomnia (@CricketInsomnia) January 3, 2024
▪️Test Captain - Dhananjaya De Silva
▪️ODI Captain - Kusal Mendis
▪️T20I Captain - Wanindu Hasaranga#SriLankaCricket #Test #ODI #T20I #T20Cricket #DhananjayaDeSilva #KusalMendis #WaninduHasaranga #cricketinsomnia pic.twitter.com/AJEwxWyS1K
திமுத் கருணாரத்ன என்ன ஆனார்..?
திமுத் கருணாரத்ன கடந்த நான்கு வருடங்களாக இலங்கை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த 2019 முதல் தற்போது வரை கேப்டனாக இலங்கை அணியை வழிநடத்தினார். இவரது தலைமையில் இலங்கை அணி 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 வெற்றி, 12 தோல்வி, 6 டிரா என கொண்டு சென்றார். இனி இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன ஒரு பேட்ஸ்மேனாகவே களமிறங்குவார்.
கேப்டனாக இருந்தபோதே திமுத் கருணாரத்ன ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனாக அவரது பேட்டிங் சராசரி 40.93 ஆகவும், கேப்டனாக அவரது பேட்டிங் சராசரி 49.86 ஆகவும் டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார். திமுத் கருணாரத்ன ஒட்டுமொத்தமாக தனது டெஸ்ட் வாழ்க்கையில் 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
டெஸ்ட் கேப்டனாக திமுத் கருணாரத்னவின் மிகப்பெரிய வெற்றி தென்னாப்பிரிக்காவில் கிடைத்தது. இவரது தலைமையிலான இலங்கை அணி கடந்த 2019ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது. தென்னாப்பிரிக்காவில் இதுவரை இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளால் கூட டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாரத்னாவிற்கு பிறகு டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தனஞ்சய டி சில்வா, இலங்கை அணியின் 18வது டெஸ்ட் கேப்டன் ஆவார்.
இலங்கை அணிக்காக இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டி சில்வா, 39.77 என்ற சராசரியில் 3,301 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 10 சதங்களும் 34 அரை சதங்களும் அடங்கும். டிசில்வா அடுத்த மாதம் தனது முதல் சவாலை எதிர்கொள்கிறார். பிப்ரவரி 6-ம் தேதி முதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் விளையாடவுள்ளது. பின்னர் வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. மூன்று புதிய கேப்டன்களின் தலைமையில் இலங்கை எந்தளவுக்கு செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.