இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீம் துரானி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


1934 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பிறந்த சலீம் துரானி இந்திய டெஸ்ட் அணிக்காக மட்டுமே விளையாடியுள்ளார். இடது கை ஆட்டக்காரரான அவர்,  25 வயதில் 1960 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கினார். கடைசியாக 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசியாக விளையாடினார். 


துரானி இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரின் சிறந்த பந்துவீச்சாக  177 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது உள்ளது. இதேபோல் பேட்டிங்கில் 1202 ரன்கள் எடுத்த துரானி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிகபட்சமாக 104 ரன்கள் எடுத்துள்ளார். தன் கேரியரில் ஒரு சதமும், 7 அரைசதமும் அவர் விளாசியுள்ளார். 


தனது பள்ளி பருவத்தில் கிரிக்கெட், டென்னிஸ் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டிய அவர், தந்தை வழியிலேயே கிரிக்கெட் வீரராக மாறினார். துரானி தந்தையான  அப்துல் அஜீஸ்  1935-36  ஆம் ஆண்டு  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். இன்றளவும் துரானியின் சிக்ஸ் அடிக்கும் திறமைக்காக அவர் நினைவுக்கூறப்படுகிறார். 1973 ஆம் ஆண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. அப்போது ரசிகர்கள் துரானி இல்லை என்றால் டெஸ்ட் போட்டி வேண்டாம் என கூச்சலிட்டனர். 


இப்படியான ரசிகர்களை பெற்றிருந்த அவர், சௌராஸ்ட்டிரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிக்காக ரஞ்சி கோப்பை விளையாடினார். கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின்  1973 ஆம் ஆண்டு நடிகை பர்வீன் பாபிக்கு ஜோடியாக சரித்ரா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதேபோல் அர்ஜூனா விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர் துரானி  என்பது சிறப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.


கடந்த 2011 ஆம் ஆண்டு பிசிசிஐயால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி துரானி கௌரவிக்கப்பட்டார். இந்நிலையில் 88 வயதான சலீம் துரானி உடல்நலக்குறைவால் இன்று (ஏப்ரல் 2) அதிகாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் சோகமடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.