ஐபிஎல் இந்த வருட சீசன் போட்டிகள் தொடங்கிவிட்ட நிலையில், சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடத்தப்பட்டன. மொஹாலியில் நடந்த முதல் போட்டியில் மழை குறுக்கீடு காரணமாக டி/எல் முறையில் முடிவு அறிவிக்கப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆடிய இந்த போட்டியில் பஞ்சாப் அணி 7 ரன் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதியது. ரிஷப் பண்ட் இல்லாமல் களமிறங்கும் டெல்லி அணி குறித்த பேச்சு சில நாட்களாகவே இருந்து வந்தது. அவரது இடத்தை நிரப்புவது எப்படி இந்திய அணிக்கு கடினமாக இருந்ததோ அதைவிட பலமடங்கு பெரிதாக இருக்கும் என்று பலர் கூறினர்.
ரிஷப் பண்ட் விபத்து
நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தனது காரில் சென்றுகொண்டு இருக்கும்போது ஒரு அதிபயங்கரமான விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. சாலையின் சென்டர் மீடியனில் மோதிய அவர் உயிர் பிழைத்ததே பெரும் பாக்கியம் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் அதிலிருந்து சிகிச்சைகள் பெற்று, தற்போது ஓய்வில் இருந்து வரும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க பயிற்சி செய்து வருகிறார். அவ்வபோது அவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
பெவிலியனில் பண்ட் ஜெர்சி
இந்த நிலையில் அவர் இல்லாத இடத்தை நிரப்ப முடியாமல் தவிக்கும் டெல்லி அணி அதனை உணர்த்தும் விதமாக நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளது. முக்கியமாக விக்கெட் கீப்பர் இடத்தை நிறப்புவதே பெரும் வேலையாக இருந்த நிலையில், சர்ஃப்ராஸ் கான் கொஞ்சம் தட்டு தடுமாறியே கீப்பிங் செய்து வருகிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியை தலைமை தாங்க வார்னர் இருப்பதால் ஓரளவுக்கு சமாளித்து வந்தாலும், ஒட்டுமொத்தமாக ரசிகர்களும், டெல்லி அணி நிர்வாகமும் அவரது இல்லாமையை உணர்வது தெளிவாக தெரிகிறது. அதனை வெளிப்படுத்தும் விதமாக ரிஷப் பண்ட் பெயர் எழுதிய அவரது அணி ஜெர்சியை அணி வீரர்கள் அமரும் பெவிலியனில் தொங்க விட்டிருந்தது பலரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. டெல்லி அணி நிர்வாகத்தினர் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
போட்டியை காணும் ரிஷப் பண்ட் ஸ்டோரி
அதே நேரத்தில் ரிஷப் பண்ட் தனது அணியான டெல்லி கேப்பிடல்ஸ் ஆடும் போட்டியை ஆவலுடன் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டுள்ளார். அவரது பதிவையும் பலர் பகிர்ந்து உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ரிஷப் பண்ட் விரைவில் மீண்டு வந்து கிரிக்கெட் விளையாட விரும்புவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் நடந்து வரும் முதல் இன்னிங்சில் டெல்லி அணி பந்து வீச்சாளர்களை மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களான கைல் மேயர்ஸ் மற்றும் நிக்கலஸ் பூரான் இருவரும் பந்தாடினர். கைல் மேயர்ஸ் வெறும் 38 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அக்ஸர் பட்டேலின் அபாரமான ஸ்பின்னில் ஆட்டமிழந்தார். நிக்கலஸ் பூரான் 20 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
முடிவில் லக்னோ அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டெல்லி அணி சார்பாக கலீல் அஹமது, சக்கரியா தலா 2 விக்கெட்டுகளும், அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். டெல்லி அணி தொடர்ந்து ஆட உள்ளனர்.