Asia Cup 2022; தொடருமா சம்பவக்காரனின் சரித்திரம்? மிரட்டும் கேப்டன் ரோகித்தின் புள்ளி விபரம்..!
இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ரோகித் ஷர்மா பொறுப்பேற்றதில் இருந்து அரங்கில் இந்திய அணியின் மீதும் ரோகித்தின் கேப்டன்சி மீதும் பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் குறித்து ஒரு சிறப்பு பார்வை..!
Asia Cup 2022; ரோகித் ஷர்மா.. கிரிக்கெட் உலகம் என்பது யாருமே கணித்துவிட முடியாத சுவாரஸ்யங்களை எப்போதும் நிகழ்த்திக் கொண்டே இருக்கும். அப்படியான ஒரு சுவாரஸ்யம் தான் இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பில் இருந்ததும், அதன் பின்னர் விராட் கோலி பொறுப்பில் இருந்ததும் தற்போது, இப்போது ரோகித் பொறுப்புக்கு வந்திருப்பதும். தோனியின் வருகைக்குப் பிறகு இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்தது மட்டுமிலாமல், அடுத்த தலைமுறை வீரர்களை மிகவும் சிறப்பாக அடையாளம் கண்டது. அவ்வகையில் அடையாளம் காணப்பட்டவர்கள் தான் விராட்டும் ரோகித்தும். இவர்களுக்கு முன்னர் பலரும் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், இவர்களே மிகச் சிறப்பான தேர்வு என கிரிக்கெட் உலகமே மெச்சும் அளவிற்கு தங்களது பணியினை செய்து வருகிறார்கள். அணியில் ஒரு வீரராக, கேப்டனாக, பேட்ஸ்மேனாக என இவர்கள் விளையாடும் விதம் பிரம்மிப்பிற்குரியது.
ஐபிஎல்லில் தனக்கென தனி இடம் பதித்த வீரர் ரோகித். இன்று வரை இவரை மிஞ்சும் அளவிற்கு ஒரு கேப்டனாக யாருமே இல்லை. ரோகித்துடன் மோதி தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் அவர்களது சிஷ்யப்பிள்ளைகளை அனுப்பியும் எந்த பயனும் அளிக்கவில்லை. வந்தவர்களுக்கு எல்லாம் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவங்களை ஏற்படுத்திய சம்பவக்காரன் ரோகித் ஷர்மா. ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். தனது நிதானமான கேப்டன்சி, சரியான முடிவுகள், வீரர்களுக்கான முழு சுதந்திரம், வீரர்களுகளை முழுமையாக நம்புவது என ரோகித்தின் பாணியே தனி. இதனாலே இவரது கேப்டன்சியில் வீரர்கள் விளையாட முழு ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரத்தில் தோனி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ரோகித் மீதும் வைக்கப்பட்டது, அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் வீரர்கள் தான் பெரும்பாலும் இந்திய அணியில் இருக்கிறார்கள் என்பது தான் தோனிமீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதே குற்றச்சாட்டு அதாவது, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கக் கூடிய வீரர்கள் தான் இந்திய அணியில் இடம் பிடிக்கிறார்கள் என்பது தான். மற்றபடி ரோகித் சர்வதேச அளவில் அணிக்காக பெற்றுத்தந்திருக்கும் வெற்றிகள் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது.
இதுவரை மொத்தம் 34 சர்வதேச டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள ரோகித் ஷர்மா 28 போட்டிகளில் அணியை வெற்றி பெறச்செய்துள்ளார். அதிலும் குறிப்பாக இரண்டு முறை இங்கிலாந்து அணியை வாஷ் அவு செய்துள்ளார். அதேபோல் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராகவும் வாஷ் அவுட் செய்து சம்பவம் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 2017ஆம் ஆண்டு முதல் பகுதி நேர கேப்டனாக இருந்து வந்துள்ள ரோகித், கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் சம்பவம் செய்துள்ளார். ஒரே ஒரு டி20 தொடரை நியூசிலாந்து அணிக்கு எதிராக இழந்துள்ளார். கடந்த முறை அதாவது 2018ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரையும் வென்று, ஆசிய கோப்பை தொடரிலும் தனது கணக்கினை தொடங்கியுள்ளார். இவரது கேப்டன்சியில் அணியின் வெற்றி விகிதம் என்பது 83.87% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை முழுநேர கேப்டனாக களமிறங்கும் ரோகித்திடம் இருக்கும் தெம்பே அவருடைய தைரியமும் சுதந்திரமும் தான். அவருக்கு முழு ஒத்துழிப்பு வழங்க காத்திருக்கும் இந்திய அணியை வைத்துக்கொண்டு அவ்ர் செய்யவிருக்கும் சம்பவங்கள் இனி சரித்திரமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதுவும் முதல் போட்டியே பாகிஸ்தான் அணிக்கு எதிராக களம் இறங்குவதால் ஒட்டுமொத்த அணியிமே முழுவீச்சில் பயிற்சி செய்து வருகிறது.