Rohit Sharma: அடிச்ச அடி அப்படி... உலகத்துலே இப்போ நம்பர் 1 பேட்ஸ்மேன் ரோகித்தான் - அதிரும் ஐசிசி தரவரிசை!
ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா. இந்திய அணிக்காக கேப்டனாக டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற கொடுத்த ரோகித் சர்மாவின் கேப்டன் பதவியை ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு இந்திய அணி நிர்வாகம் பறித்தது.
நம்பர் 1 பேட்ஸ்மேன்:
இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்ற ரோகித் சர்மா முதல் போட்டியில் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் அடுத்த போட்டியில் அரைசதமும், கடைசி போட்டியில் சதமும் விளாசி அசத்தினார். இது பிசிசிஐ-க்கு அவர் அளிக்கும் சவுக்கடியாகவே ரசிகர்களால் பார்க்கப்பட்டது.
முதன்முறையாக நம்பர் 1:
இந்த சூழலில், ஐசிசி இன்று ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பு 3வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா 781 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 38 வயதான ரோகித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வதேச தரவரிசையில் முதலிடம் பிடித்திருப்பது இதுவே முதன்முறை ஆகும்.
இதை அவரது ரசிகர்கள் காெண்டாடி வருகின்றனர். 2027 உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் ஆட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆடவில்லை என்று அஜித் அகர்கள் கூறிய நிலையில், ரோகித் சர்மா ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்து அவர்களுக்கு பதிலடி அளித்துள்ளார். விராட் கோலி ஒரு இடம் சரிந்து 6வது இடத்திற்கு சென்றுள்ளார். அவர் 725 புள்ளிகள் பெற்றுள்ளார்.
ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான டாப் 10 வீரர்கள்:
1. ரோகித் சர்மா - 781 புள்ளிகள்
2. இப்ராஹிம் ஜட்ரான் - 764 புள்ளிகள்
3. சுப்மன்கில் - 745 புள்ளிகள்
4. பாபர் அசாம் - 739 புள்ளிகள்
5. டேரில் மிட்செல் - 734 புள்ளிகள்
6. விராட் கோலி - 725 புள்ளிகள்
7. அசலங்கா - 716 புள்ளிகள்
8. டெக்டர் - 708 புள்ளிகள்
9. ஸ்ரேயாஸ் ஐயர் - 700 புள்ளிகள்
10. ஷாய் ஹோப் - 690 புள்ளிகள்
ஒரு ஆஸ்திரேலிய வீரர்கூட இல்லை:
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டாப் 10 வீரர்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளனர். ஆப்கானிஸ்தான், அயர்லாந்து வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில் ஒரு ஆஸ்திரேலிய வீரர்கூட இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.
முதலிடம் பிடித்துள்ள ரோகித் சர்மா அதிக வயதில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ரோகித் சர்மா 276 ஒருநாள் போட்டிகளில் 268 போட்டிகளில் பேட் செய்து 11 ஆயிரத்து 370 ரன்களை எடுத்துள்ளார்.
3 இரட்டை சதங்கள்:
அதில் 33 சதங்கள், 59 அரைசதங்கள் அடங்கும். 37 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். அதிகபட்சமாக 264 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா தன்வசம் வைத்துள்ளார். இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுடன் அடுத்த மாதம் ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. அந்த தொடரில் ரோகித் சர்மா இடம்பிடிப்பார் என்று நம்பப்படுகிறது.




















