(Source: Poll of Polls)
IND vs ENG 3rd ODI: ரிஷப்பண்ட் அபார சதம்...! ஆல்ரவுண்டர் ஹர்திக் கலக்கல்..! 8 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்று இந்தியா அசத்தல்..!
IND vs ENG 3rd ODI: ரிஷப்பண்டின் அபார சதம் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவின் கலக்கலான ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து இந்திய அணிக்கு 260 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் சொதப்பிய ஷிகர்தவான் இந்த போட்டியிலும் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கேப்டன் ரோகித்சர்மா 17 பந்தில் 4 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி இந்த போட்டியிலும் ரசிகர்களை ஏமாற்றினார்.
விராட்கோலி 22 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், முதல் 3 விக்கெட்டுகளையும் கடந்த போட்டியில் அசத்திய டோப்ளே வீழ்த்தினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடினார். அவர் 16 ரனகளில் வெளியேற இந்தியா 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது, இந்திய அணிக்கு ஆபத்பாந்தவனாக ரிஷப்பண்ட் – ஹர்திக் பாண்ட்யா இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இருவரும் மிகவும் நிதானமாக ஆடினர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்ததால் இருவரும் ஓரிரு ரன்களாக எடுத்தனர். பின்னர், மெல்ல மெல்ல அதிரடிக்கு மாறினர். ரிஷப்பண்டும், ஹர்திக் பாண்ட்யாவும் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினர். அரைசதம் விளாசிய பிறகு இருவரும் ரன் வேகத்தை அதிகரித்தனர். அணியின் ஸ்கோர் 205 ரன்களை எடுத்தபோது இந்த ஜோடி பிரிந்தது. அபாரமாக ஆடிய ஹர்திக்பாண்ட்யா 55 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 71 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ரினுஷப்பண்ட் – ஹர்திக்பாண்ட்யா ஜோடி 5வது விக்கெட்டிற்கு 133 ரன்களை விளாசினர். ஹர்திக் பாண்ட்யா அவுட்டான பிறகு சிறிது நேரம் நிதானம் காட்டிய ரிஷப்பண்ட் அதிரடிக்கு மாறினார். பின்னர், 106 பந்துகளில் தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை ரிஷப்பண்ட் விளாசினார். சதத்திற்கு பிறகு ரிஷப்பண்ட் பவுண்டரிகளாக விளாசினார். டேவிட் வில்லி வீசிய 42வது ஓவரில் மட்டும் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசி ருத்ரதாண்டவம் ஆடினார். அடுத்த ஓவரிலே பவுண்டரி விளாசி ரிஷப்பண்ட் இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
ரிஷப்பண்ட் 113 பந்துகளில் 16 பவுண்டரி 2 சிக்ஸருடன் 125 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா 7 ரன்னுடன் களத்தில் இருந்தார். ஆட்டநாயகன் விருது ரிஷப்பண்டிற்கு வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்