(Source: ECI/ABP News/ABP Majha)
இவரா அடுத்த கோலி..? வெஸ்ட் இண்டீசில் வெத்து வேட்டான சுப்மன்கில்.. சொதப்பலோ சொதப்பல்..!
20.40 என்ற சராசரியில் ஆடியுள்ள அவர் 120 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அவர் ஆடும் ஓப்பனிங் பகுதிக்கு ஏராளமான போட்டி இருக்கும் பட்சத்தில் இவருடைய இந்த ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளது.
இந்திய இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில், நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் அனைத்து வடிவத்திலும் ஆடிய ஒரு வீரர் ஆவார். கிட்டத்தட்ட ஒருநாள் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டக்காரர் அவர்தான் என்றான பட்சத்தில், பெரும்பாலான போட்டிகளில் அவர் ரன் குவிக்கத் தவறியது கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் சொதப்பல்கள்
மேற்கிந்தியத் தீவுகள் உடனான மூன்று வடிவ போட்டிகளில் முதல் இரண்டில் வென்ற இந்திய அணி, டி20 தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் இந்த முக்கியமான கட்டத்தில் இந்திய அணி வீரர்கள் பலரும் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே நன்றாக ஆடி, பல ஆட்டங்களில் சொதப்புவது தேர்வுக்குழு-வுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் அடுத்த விராட்கோலி என்று நம்பிக்கையை ஏற்படுத்தி, பெயரெடுத்த சுப்மன் கில் இந்த தொடரில் பல இடங்களில் சொதப்பியது ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றை இலக்கத்தில் சுப்மன் கில்
சுப்மன் கில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளில் 4 இல் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்துள்ளார். நான்காவது டி20 இல் மட்டும், 47 பந்துகளில் 77 ரன்கள் குவித்திருந்தார். முதல் போட்டியில் 3(9), இரண்டாவது போட்டியில் 7(9), மூன்றாவது போட்டியில் 6(11), ஐந்தாவது போட்டியில் 9(9) என அவரது எண்ணிக்கை மிக மோசமாக உள்ளது. இந்த டி20 தொடரில் அவர் ஐந்து போட்டிகளில் வெறும் 102 ரன்கள் மட்டுமே குவித்த்துள்ளார். 20.40 என்ற சராசரியில் ஆடியுள்ள அவர் 120 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அவர் ஆடும் ஓப்பனிங் பகுதிக்கு ஏராளமான போட்டி இருக்கும் பட்சத்தில் இவருடைய இந்த ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக உள்ளது.
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஃபார்ம்
அதே போல ஒரு நாள் போட்டியிலும் ஒரே ஒரு போட்டியில் தான் அவர் சோபித்தார். முதல் இரண்டு போட்டிகளில் முறையே 7(16), 34(49) என்று ரன் குவித்த அவர் மூன்றாவது போட்டியில் 92 பந்துகளில் 85 ரன்கள் குவித்தது ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தது. மேற்கிந்தியத் தீவுகள் உடனான டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் சோபிக்கத் தவறினார். மூன்று இன்னிங்ஸ் ஆடிய அவர் ஒட்டுமொத்தமாக வெறும் 45 ரன்கள் மட்டுமே குவித்தது பெரும் பின்னடைவாக இருந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அவர் பெரிதாக ரன் குவிக்காதது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கு வரும் மற்ற ஓப்பனர்கள்
இதே வேளையில் அவருடன் களமிறங்கும் சக வீரரான இஷான் கிஷன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நன்றாக ஆடியுள்ளார். குறிப்பாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டிகளில் ஆடாத மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் தனது ஃபார்மை நிரூபித்துள்ளார்.
அறிமுகமான முதல் டெஸ்டில் 171(387) ரன்கள் குவித்து ஆச்சர்யப்பட வைத்தார். கடைசி மூன்று டி20 யில் மட்டும் களம் இறங்கிய அவர், நான்காவது டி20 யில் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டத்தை வெல்ல உறுதுணையாக இருந்தார். மற்ற இரு போட்டிகளிலும் அவரும் ஒற்றை இலக்கத்தில் தான் ஆட்டம் இழந்தார். இருப்பினும் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வரும் சுப்மன் கில் ஃபார்மில் இல்லாமல் இருப்பது பெரும் கவலையாக மாறியுள்ளது. இந்திய அணி விரைவில் அவருக்கு மாற்று தேடுமா? அல்லது அவர் மீது நம்பிக்கை வைத்து களமிறங்குமா? என்பதையும், அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றுவாரா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.