IND vs WI, ODI Live: டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ்..! பேட்டிங்கில் கலக்குவார்களா கரிபீயன் வீரர்கள்..? பந்துவீச்சில் மிரட்டுமா இந்தியா..?
IND vs WI, ODI Live: டிரினிடாட் நகரில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டிரினிடாட் நகரின் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரண் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, இந்தியா முதலில் பந்துவீசுகிறது. இந்திய அணியில் ஆவேஷ்கான் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.
இந்திய அணியைப் பொறுத்தமட்டில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். கடந்த போட்டியில் இந்திய கேப்டன் ஷிகர்தவான், தொடக்க வீரர் சுப்மன்கில் அபாரமான தொடக்கத்தை அளித்தனர். துணைகேப்டனாக பொறுப்பு ஏற்றுள்ள ஸ்ரேயஸ் அய்யரும் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர்கள் இன்றைய போட்டியிலும் பேட்டிங்கில் அசத்தினால் இந்தியாவுக்கு பலமாகும். கடந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் வரிசை ஆட்டக்காரர்கள்தான் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால் இந்திய அணி நிச்சயமாக 350 ரன்களை கடந்திருக்கும். இதனால், இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் கண்டிப்பாக திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம். தீபக் ஹூடா அதிரடி காட்ட வேண்டியது அவசியம் ஆகும்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கும் இந்தியாவிற்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் என்பதை கடந்த போட்டியிலே நிரூபித்தனர். அந்த அணியின் ஷாய் ஹோப் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் அசத்திய கைல் மேயர்ஸ், ப்ரூக்ஸ் இன்றைய போட்டியிலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஆகும். ப்ரண்டன் கிங், கேப்டன் பூரண் அதிரடி காட்டினால் அந்த அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும்.
கடந்த போட்டியில் அந்த அணியின் 8வது வரிசை வீரரான ஷெப்பர்ட் வரை பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாகும். கடந்த போட்டியில் சொதப்பிய ஹோப் மற்றும் பாவெல் இந்த போட்டியில் பேட்டிங்கில் கலக்கின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பலமாகும். இரு அணிகளைப் பொறுத்தவரையிலும் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது.
One change in the #TeamIndia Playing XI from the previous game.
— BCCI (@BCCI) July 24, 2022
Avesh Khan makes his debut and Prasidh Krishna sits out for the game.
Live - https://t.co/EbX5JUciYM #WIvIND pic.twitter.com/o3SGNrmQBd
கடந்த போட்டியில் இந்தியாவின் முகமது சிராஜ், பிரசித்கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல் என அனைவரும் ரன்களை வாரி வழங்கினர். இந்த போட்டியில் பிரசித்கிருஷ்ணா பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்ஜாரி ஜோசப், சீல்ஸ், ஷெப்பர்ட்ஸ, மோட்டி, ஹொசைன் ஆகியோரும் ரன்களை வாரி வழங்கினர். இதனால், இன்றைய போட்டியில் இரு அணிகளும் பந்துவீச்சில் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், தொடரை விட்டுக்கொடுக்கமால் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணியும் முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்