IND vs ENG: டி20 மோடில் ஓவல் டெஸ்ட்... 35 ரன்களா? 3 விக்கெட்டா? இங்கிலாந்து - இந்தியா வெற்றிக்கு மல்லுகட்டு
IND vs ENG: லண்டனில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படும் நிலையில் இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்படுகிறது.

IND vs ENG: இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஓவலில் கடைசி டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களையும், இங்கிலாந்து 247 ரன்களையும் எடுக்க இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்களை எடுத்த இந்தியா இங்கிலாந்திற்கு 374 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
374 ரன்கள் டார்கெட்:
இலக்கு பெரியதாக இருந்தாலும் இங்கிலாந்து கைவசம் 9 விக்கெட்டுகளும், இரண்டு நாள் ஆட்டமும் இருந்ததால் வெற்றி யாருக்கு? என்பதில் கடும் சவால் உண்டானது. இதையடுத்து, நேற்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தை தொடங்கிய டக்கெட் - கேப்டன் போப் ஒருநாள் போட்டி போலவே ஆடினார்கள்.
சிறப்பாக ஆடிய டக்கெட் அரைசதம் விளாசினார். அவர் 83 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த தொடர் முழுவதும் சொதப்பி வந்த ஒல்லி போப் பந்துகளில் 5 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
சதம் விளாசிய ஜோ ரூட் - ஹாரி ப்ரூக்:
அப்போது ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். 106 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்திற்கு இந்த ஜோடி தன்னம்பிக்கை அளித்தது. இருவரும் இணைந்து அபாரமாக ஆடினார்கள். ஜோ ரூட் சற்று நிதானமாக ஆட ஹாரி ப்ரூக் அடித்த ஆடினார்.

ஆகாஷ்தீப், பிரசித் கிருஷ்ணா, முகது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் மாறி, மாறி வீசியும் இந்த ஜோடியை கட்டுப்படுத்த இயலவில்லை. மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்ததால் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருந்தது. அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் விளாசினார். இதனால், இங்கிலாந்து 200 ரன்களை கடந்து, 250 ரன்களை கடந்தது. அபாரமாக ஆடிய ஹாரி ப்ரூக் சதம் விளாசினார்.
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள்:
தொடர்ந்து அதிரடி காட்டிய ஹாரி ப்ரூக் ஆகாஷ் தீப் பந்தில் அவுட்டானார். அவர் 98 பந்துகளில் 14 பவுண்டரி 2 சிக்ஸருடன் 111 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு வந்த ஜேக்கப் பெத்தேல் ரன் எடுக்கத் தடுமாற அவர் 5 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் போல்டானார். மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக ஆடி வந்த முன்னாள் கேப்டன் ஜோ ரூட் தனது 39வது சதத்தை விளாசினார். அவர் 105 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டாக 337 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி பக்கம் ஆட்டம் திரும்பியது. அடுத்து ஜேமி ஸ்மித் - ஓவர்டன் ஜோடி சேர்ந்தனர். மைதானம் பந்துவீச்சிற்கு ஒத்துழைக்க தொடங்கியதும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா வேகத்தில் மிரட்டினர். இந்த தொடர் முழுவதும் அசத்திய ஜேமி ஸ்மித் ரன் எடுக்கத் தடுமாறினார்.
35 ரன்களா? 3 விக்கெட்டா?
ஆனால், துரதிஷ்டவசமாக மோசமான வானிலை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நேற்று முடித்துக் கொள்ளப்பட்டது. மைதானம் பந்துவீச்சிற்கு ஒத்துழைத்ததால் தொடர்ந்து ஆடியிருந்தால் ஸ்மித் அல்லது ஓவர்டன் இருவரில் ஒரு விக்கெட்டடை இந்தியா வீழ்த்தியிருக்கும். தற்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களுடன் ஆடி வருகிறது.

கடைசி நாளான இன்று ஆட்டம் இதனால் விறுவிறுப்பாகியுள்ளது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. கிறிஸ் வோக்ஸ் பேட்டிங்கிற்கு களமிறங்கினாலும் அவரால் காயம் காரணமாக இயல்பாக பேட்டிங் செய்ய இயலாது.
இந்தியா அபாரமாக பந்துவீசினால் மட்டுமே இன்று வெற்றி பெற இயலும். இதனால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.



















