IND vs AUS: இதயங்கள் உடைந்த நாள்! பறிபோன உலகக்கோப்பை! இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா!
கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை உடைத்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி கடந்தாண்டு இதே நாள் அகமதாபாத்தில் நடந்தது.
இந்தியாவில் உள்ள மக்களையும், கிரிக்கெட்டையும் எக்காலத்திற்கும் பிரிக்க முடியாத ஒன்றாகும். அவர்களின் ரத்தத்தின் ஒரு அங்கமாகவே கிரிக்கெட் ஊறியுள்ளது. அதற்கு காரணம் 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றதே ஆகும்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டி:
அதன்பின்பு நடக்கும் ஒவ்வொரு உலகக்கோப்பையையும் இந்திய அணி முத்தமிடும் என்றே இந்திய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பது வழக்கம் ஆகும். 2011ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற பிறகு 2015, 2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்குச் சென்ற பிறகு கடந்த உலகக்கோப்பை கடந்தாண்டு நடைபெற்றது.
தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குச் சென்றது. இந்தியாவை ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது.
அதிரடி காட்டிய ரோகித்; ஆட்டத்தை மாற்றிய கோலி அவுட்:
ஆட்டத்தை தொடங்கிய சுப்மன்கில் 4 ரன்களில் அவுட்டாக விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்கவிட்டார். அந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்த விராட் கோலியும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
பட்டாசாய் கொளுத்திய ரோகித் சர்மா 31 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் பந்தில் அவுட்டாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த கே.எல்.ராகுல் – கோலி ஜோடி ஆட்டத்தை முன்னோக்கி நகர்த்திய நிலையில், அபாரமாக ஆடிய விராட் கோலி அரைசதம் கடந்தார். ஆட்டம் இந்தியாவின் கைக்குள் இருந்த நிலையில், 28.3வது ஓவரில் 54 ரன்களில் அவுட்டானார்.
நம்பிக்கை தந்த தொடக்கப் பந்துவீச்சு:
கோலி ஆட்டமிழந்ததும் ஒட்டுமொத்த இந்திய பேட்டிங்கும் சொதப்பத் தொடங்கியது. கே.எல்.ராகுல் விக்கெட்டு விழுந்து விடக்கூடாது என்று நிதானமாக ஆட, அடுத்து வந்தவர்களோ விக்கெட்டுகளை மட்டும் பறிகொடுத்தனர். ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழக்க, சிக்ஸர் மன்னனாக சித்தரிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 18 ரன்களில் அவுட்டானார். கே.எல்.ராகுல் 107 பந்துகளில் 1 பவுண்டரி மட்டும் அடித்து 66 ரன்களுக்கு வெளியேற இந்திய அணி 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை எடுத்தது.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி உலகக்கோப்பையும் தங்கள் கையில் என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஷமி தான் வீசிய முதல் ஓவரிலே டேவிட் வார்னரை அவுட்டாக்கினார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷை பும்ரா அவுட்டாக்க, ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களில் அவுட்டாக 47 ரன்களுக்கு 3 விக்கெட் என்று ஆஸ்திரேலியா தடுமாறியது.
வில்லனாக மாறிய ஹெட்:
அகமதாபாத் மைதானத்தில் திரண்டிருந்த ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆர்ப்பரிக்க அனைவரது சந்தோஷத்திற்கும் எமனாக மாறினார் டிராவிஸ் ஹெட். ஆட்டத்தை மெதுவாக நகர்த்திய அவருக்கு லபுஷேனே ஒத்துழைப்பு தந்தார். இவர்களைப் பிரிக்க பும்ரா, ஷமி, ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோரை கேப்டன் ரோகித் பயன்படுத்தினார். ஆனால், இருவரும் நிதானமாக ஆட்டத்தை நகர்த்தி நங்கூரமிட்டு களத்தில் ஆக்கிரமித்தனர். பவுண்டரிகளாக விளாசி ஆட்டத்தை மெல்ல ஆஸ்திரேலிய பக்கம் நகர்த்தி ஹெட், அவ்வப்போது சிக்ஸரையும் விளாசினார்.
இதனால், ஆட்டம் இந்தியாவின் கையை விட்டுச் சென்றது. அகமதாபாத்தில் ஆதிக்கம் செலுத்திய ஹெட் சதம் அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றியின் அருகில் கொண்டு வந்தார். வெற்றி பெற 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹெட் அவுட்டானார. அவர் 120 பந்துகளில் 15 பவுண்டரி 4 சிக்ஸருடன் 137 ரன்கள் என்று எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
கோடிக்கணக்கான இதயங்கள் உடைந்த நாள்:
கடைசியில் 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஸ்திரேலிய 241 ரன்களை எடுத்தது. அகமதாபாத்தில் கூடியிருந்த ஒரு லட்சம் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியை நேரலையில் பார்த்த கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் மனம் உடைந்தனர்.
போட்டியைப் பார்த்த ரசிகர்களுக்கே இந்த மனநிலை என்றால், உலகக்கோப்பை கனவுடன் மைதானத்தின் உள்ளே நுழைந்த இந்திய வீரர்கள் முற்றிலும் நொறுங்கினர். முகமது சிராஜ் கண்ணீர்விட்டு அழுதார். இந்தியாவிற்காக சாதனைகள் மேல் சாதனைகளை படைத்த கோலியும், ரோகித்தும் கண்ணீரை வெளிப்படுத்த முடியாமலும் தோல்வி வலியில் மைதானத்தை விட்டு வெளியே வந்தது இந்திய ரசிகர்களுக்கு இதயத்தை இன்னும் ரணமாக்கியது.
50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இரண்டு முறை ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்த இந்தியா நிச்சயம் ஒருநாள் அதற்கான கணக்கை தீர்க்கும்.