WTC Final: "நம்பர் 8-இல் நமக்கு ஐந்து செஞ்சுரி அடித்த வீரர் இருக்கிறார்… தோற்க வாய்ப்பேயில்லை," கணிக்கும் சுனில் கவாஸ்கர்!
இந்தியாவின் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இது நடக்கும் என்று கணித்துள்ளார், இந்திய பேட்டர்கள் மீண்டும் ஆஸி.யை வீழ்த்துவார்கள் என்று கூறுகிறார்.
ஜூன் மாதம் இங்கிலாந்து, ஓவலில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான (WTC) 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ செவ்வாயன்று அறிவித்தது. அதுகுறித்து கருத்துகள் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும் பலரிடம் இருந்து ஒரு சிறந்த அணி என்ற பேச்சு நிலவி வருகிறது. மைதான நிலைமைகள் இந்தியாவில் இருந்ததுபோல இருக்காது என்றாலும், ரோஹித் சர்மா அண்ட் கோ. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய மண்ணில் தோற்கடித்ததன் மூலம் நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.
ஸ்பின் காம்போ
நடைபெற்று முடிந்த பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபியில் நான்கு டெஸ்டுகளில் இரண்டில் இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றிருந்தது, அதே நேரத்தில் ஆஸ்திரேலியா ஒரு வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் ஃபிளாட் பிட்சில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அந்த தொடர் முழுவதும் இந்தியாவின் டாப் ஆர்டர் பெரிதாக சோபிக்காத நேரங்களில் எல்லாம் கீழ் வரிசை சூழல் பந்துவீச்சு காம்போவான மூன்று பேர் (ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல்) அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
கவாஸ்கர் கணிப்பு
தொடர் முழுவதும் முக்கிய பேட்ஸ்மேன்களை விட இவர்கள் மூவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு தலைவலியாக இருந்தார்கள், குறிப்பாக அக்ஸர் படேல் பேட்டிங்கில் அசத்தினார். இந்த நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இதுவே நடக்கும் என்று கணித்துள்ளார், இந்திய பேட்டர்கள் மீண்டும் ஆஸி.யை வீழ்த்துவார்கள் என்று கூறுகிறார்.
டாஸ் வென்று பேட் செய்ய வேண்டும்
"நான் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வெல்லும் என்று நினைக்கிறேன், ஏனென்றால் நீங்கள் இந்திய பேட்டிங் வரிசையைப் பார்த்தால், 8-வது இடத்தில், ஐந்து டெஸ்ட் சதங்களை அடித்துள்ள அஷ்வின் இருக்கிறார். மேலும் ஓவல் பொதுவாக பேட்டிங் செய்ய மிகவும் நல்ல பிட்ச். டாஸ் வென்று, முதல் இரண்டு நாட்களில் பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும், பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வேண்டிய தேவையே வராது," என்று கவாஸ்கர் ஐபிஎல் 2023-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வர்ணனை செய்யும்போது குறிப்பிட்டார்.
வீரர்கள் சீக்கிரம் இங்கிலாந்து செல்ல வேண்டும்
கவாஸ்கர் WTC க்கு தேர்வான வீரர்களுக்கு ஒரு ஆலோசனையும் வழங்கினார், அவர்கள் இங்கிலாந்துக்கு சீக்கிரம் புறப்பட்டு, அந்த மைதான நிலைமைகளுக்குப் பழகும்படி அறிவுறுத்தினார். "ஐபிஎல் மே 28-ல் முடிவடையும், ஜூன் 7-ம் தேதி டெஸ்ட் தொடங்கும் என்று எனக்குத் தெரியும். பிளேஆஃபிற்கு தகுதி பெறாத அணிகளைச் சேர்ந்த வீரர்கள், முன்பே இங்கிலாந்துக்கு சென்று கிளப் அணிகளுக்கு எதிராக விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன். இது அவர்களுக்கு இங்கிலாந்து மைதான நிலைமைகளை புரிந்துகொள்ள உதவும்," என்று அவர் கூறினார். ஜூன் 2021 இல் WTC இன் தொடக்கப் பதிப்பின் இறுதிப் போட்டியை இந்தியா அடைந்தது, ஆனால் சவுத்தாம்ப்டனில் மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் நியூசிலாந்திடம் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும், இந்திய அணி இந்த முறை ஒரு மேலும் நன்றாக ஆடி, கோப்பையை வென்று ஒரு வழியாக ஐசிசி ட்ராஃபியை பல வருடங்களுக்கு பின் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.