Villupuram: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிப்பெருவிழா; உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசிப்பெருவிழா முன்னேற்பாடுகள் பணி தீவிரம்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் ஆலய அலுவலகத்தில், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசிப்பெருவிழாவினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் அன்று (29.02.2024) நடைபெற்றது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற பிரார்த்தனை தலமாகும், இத்திருக்கோவிலில், வருடாந்திரா மகா சிவராத்ரி முதல் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி, எதிர்வரும் 08.03.2024 முதல் 20.03.2024 முடிய 13 நாட்கள் மாசிப்பெருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில், மகா சிவாராத்திரி, மயானக்கொள்ளை, தீ மிதித்தல், திருத்தேர்விழா, சத்தாபரணம், தெப்பல் உற்சவம் போன்ற முக்கியமான உற்சவ நாட்களில், திருக்கோவிலுக்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களின் நலன் கருதி, மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து துறை வாரியாக செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் அதிம் கூடும் இடங்களில் அடிப்படை வசதி
அதன்படி, ஊராட்சி ஒன்றியத்தின் மூலம், தற்காலிக பேருந்து நிலையங்கள், வள்ளலார் மடம், ஜெயின் கோவில் இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், மின் விளக்கு வசதி மற்றும் பொதுமக்கள் அதிம் கூடும் இடங்களில் கூடுதல் மின் விளக்கு வசதி ஏற்படுத்துதல், தூய்மைப்பணி மேற்கொள்ளுதல், தற்காலிக கழிவறைகள், குப்பை தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மேல்மலையனூர் கிராமத்திற்கு வரும் கொடுக்கன்குப்பம் சாலை, முருகன்தாங்கல் கூட்ரோடு, வடபாலை சாலை ஆகிய சந்திப்பு சாலைகளில் ஊராட்சி தலைவர்கள் மூலம் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கண்காணிப்பு கேமரா
இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில், திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்திட வேண்டும். கூட்டநெரிசலை தவிர்த்திடும் பொருட்டு, ஆங்காங்கே தடுப்பு கட்டைகள் அமைத்து கூட்ட நெரிசலை தவிர்த்திட வேண்டும். திருக்கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வசதி, திருத்தேர், தெப்பல் நல்ல முறையில் உள்ளதற்கான பொதுப்பணித்துறை மூலம் பெற வேண்டும்.
தனிநபருக்கு விபத்துக்காப்பீடு
தேர் ஓட்டத்திற்கு முன்பாக திருத்தேர் மற்றும் தனிநபருக்கு விபத்துக்காப்பீடு, தேரோட்டம் நடைபெறும் பொழுது தேருக்கு முன்பாகவும், பின்பாகவும் சுமார் 15 அடி இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்வதோடு, பக்தர்கள் எவருக்கு தேருக்கு அருகில் வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேரோட்டத்திற்கு தேவையான முட்டுக்கட்டைகள் மற்றும் இதர அத்தியாவசிய உதிரி பாகங்கள் தேவையான அளவில் வைத்துக்கொண்டு தேரினை பின்தொடர்ந்து வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு வசதிகள்
தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக, திருவிழா தொடங்கும் முன்பே திருக்கோவில்களில் உள்ள மின்ஒயரிங் மற்றும் மின்இணைப்புகள் தொடர்பான பணிகளை சரிபார்த்துக்கொண்டு அனைத்தும் சரியாக உள்ளதா என சான்று வழங்கிட வேண்டும். திருவிழாக்காலங்களில் மின்தடைகள் ஏற்படாதவாறு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுவதையும் உறுதி செய்து, தேரோடும் வீதிகளில் மின்கம்பியினை அகற்றி போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். தீயணைப்புத்துறையின் வாயிலாக, தீமிதி விழா, தேரோட்டம், தெப்பல் ஆகிய நாட்களில் தீயணைக்கும் ஊர்தியினை தயார்நிலையில் வைத்து திருக்கோவிலில் உள்ள தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளதா என்பது குறித்து முன்கூட்டியே பரிசோதித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அவசர ஊர்தியுடன் இரண்டு தற்காலிக மருத்துவக்குழக்கள்
மேலும், காவல்துறையினர் திருவிழா காலங்களில் அதிக மக்கள் ஒன்றாக கூடுவதால் திருட்டு சம்பவங்கள், வழிபறி கொள்ளைகள் நடைபெறுவதை தடுத்திடும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பு பணியை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் சாமி தரிசனம், தீமிதித்தல், தேர்வீதி உலா உள்ளிட்டவைகளின்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தி கூட்டநெரிசல் ஏற்படாதவாறும் பாதுகாத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தக்க பாதுகாப்பு பணியும் வழங்க வேண்டும். மேலும், சுகாதாரத்துறை சார்பில், அவசர ஊர்தியுடன் இரண்டு தற்காலிக மருத்துவக்குழக்கள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதிகளவில் பக்தர்கள் கூடுதல் தொற்றுநோய் பரவாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு பேருந்து வசதி
நெடுஞ்சாலைத்துறையினர் பக்தர்கள் வரும் நெடுஞ்சாலைகள் அனைத்தையும் சீர்செய்து, போக்குவரத்து தகவல் பலகை, ஆபத்தான வளைவு, வேகத்தடை உள்ளிட்ட பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைத்து சாலைகளை முறையாக பராமரித்திட வேண்டும். மேலும், அனைத்து இணைப்பு சாலைகளிலும் மேடு, பள்ளங்கள் ஏதேனும் இருப்பின் அதனை மூலம் சரிசெய்திட வேண்டும். மேலும், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில், பக்தர்கள் வருகை புரிவதற்கான போதிய கூடுதல் பேருந்துகளையும், சிறப்பு பேருந்துகளையும், இயக்கிட வேண்டும். தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும், கோவில் நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து கோவில்கள் பகுதிகள் மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் தூய்மைப் பணிகளும், பிளிச்சிங் பவுடர், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்பதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
14.03.2024 அன்று தேரோட்டம்
வருவாய்த்துறை சார்பில், நெடுஞ்சாலை மற்றும் தேரோடும் வீதி, திருக்கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமப்புகளை அகற்றிட வேண்டும். பொதுப்பணித்துறை சார்பில், எதிர்வரும் 14.03.2024 அன்று தேரோட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருக்கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு வரும் புதிய திருத்தேர் அலங்காரம், தேரோடும் வீதிகளை பார்வையிட்டு, தக்க சான்று வழங்கிட வேண்டும். மேலும், 17.03.2024 அன்று நடைபெறும் தெப்பல் உற்சவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ள தெப்பலை பார்வையிட்டு தக்க சான்று வழங்கிட வேண்டும். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தற்காலிக உணவகங்கள், நிரந்தர உணவகங்களில் தரமான உணவு வழங்குவது குறித்து அவ்வப்பொழுது ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.
உள்ளூர் விடுமுறை
மேலும், 14.03.2024 (வியாழக்கிழமை) அன்று திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளதால், அதிக அளவில் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், விழுப்புரம் மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையினை ஈடுசெய்யும் விதமாக 23.04.2024 (சனிக்கிழமை) அன்று அரசு பணி நாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில், சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில், பக்தர்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி அவர்கள் மீண்டும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.