Mahalaya Amavasya: மகாளய அமாவாசை தர்ப்பணம் செய்தால் இவ்வளவு நன்மைகளா ? நீர் நிலைகளில் குவிந்த மக்கள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனந்தசரஸ் குள்ளதில் மகாளய அமாவாசையை ஒட்டி அதிகாலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.
இந்து மதத்தில் அமாவாசை மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசையாக கருதப்படுகிறது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து வழிபாடு செய்வர். ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு அமாவாசையும் தனித்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. குறிப்பாக, ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகாளாய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளாய அமாவாசை ஆகும்.
மகாளய அமாவாசை:
நடப்பாண்டிற்கான மகாளய அமாவாசை இன்று வழிபடப்படுகிறது. பொதுவாக ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. ஆடி மற்றும் தை மாத அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் இந்த மகாளய அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிக மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில் அனைத்து முன்னோர்களையும் நினைவு கூர்ந்து, புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து தர்ப்பணம் செய்வது நல்லது, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகின்ற நிலையில் இந்த மகாளய பட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனிப்பெரும் சிறப்பாக திகழ்கிறது.
ஐதீகம் கூறுவது என்ன ?
ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடல், கடலூர் வெள்ளி கடற்கரை, திருச்சி காவிரி கரை, காரைக்குடி கொற்றாளீஸ்வரர் கோயில் குளக்கரை, கன்னியாகுமரி கடற்கரை, திருச்செந்தூர் கடற்கரை உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து புனித நீராடி பின்னர் தர்ப்பணம் அளித்தனர். தங்கள் முன்னோர்களுக்கு எள்ளுப்பிண்டத்தை படையலாக வைத்து இந்த தர்ப்பணம் நடைபெற்றது.
மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். மேலும், முன்னோர்களுக்கு நீண்ட வருடங்களாக தர்ப்பணம் அளிக்காமல் இருந்தாலும் இந்த மகாளய அமாவாசை நன்னாளில் தர்ப்பணம் அளிப்பதால் அனைத்து சங்கடங்களும் தீரும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
நீர் நிலைகளில் குவிந்த பொதுமக்கள்
இன்று மகாளய அமாவாசை என்பதால் தமிழகத்தில் புண்ணிய தீர்த்தங்களில் ஏராளமான மக்கள் புனித நீராடி தங்களது முன்னோரர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். அந்தவகையில், கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குளக்கரைகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் இருக்கும் அனந்தசரஸ் குளத்தில் மகாளய அமாவாசையை ஒட்டி அதிகாலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி வருகின்றனர். மேலும் காஞ்சிபுரம் மாநகரில் உள்ள கச்சபேஸ்வரர் கோவில் குளம், தாயார் அம்மன் குளம், சர்வத்தீர்த்த குளம் உள்ளிட்ட குளக்கரைகளில் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே குவிய துவங்கி புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.