Nagaraja Temple: நாகர்கோவில் ஊர் பெயர் வரக்காரணம் தெரியுமா? - இந்த கோயில் தான்
Nagaraja Temple Nagercoil: நாகராஜா கோயிலில் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று வழிபாடு செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
![Nagaraja Temple: நாகர்கோவில் ஊர் பெயர் வரக்காரணம் தெரியுமா? - இந்த கோயில் தான் Kanyakumari News Nagaraja Temple Is Reason For Name Nagercoil Know More Details tnn Nagaraja Temple: நாகர்கோவில் ஊர் பெயர் வரக்காரணம் தெரியுமா? - இந்த கோயில் தான்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/73aeae297674c142ee39a579d978d6f91704945022364571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாகவும் நாகராஜா கோயில் விளங்கி வருகிறது.
தமிழகத்தில் நாகர் வழிபாட்டுக்கு எனத் தனியாக அமைந்த கோயில். நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகரே மூலவராக வீற்றிருக்கும் கோயில் நாகராஜா கோயில் மட்டுமே. முற்காலத்தில் இந்தப் பகுதி வயல்கள் சூழ்ந்த பகுதியாக இருந்தது. வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக்கொண்டிருந்த ஒரு பெண், ஒரு நெற்கதிரை அறுக்கும்போது அதிலிருந்து ரத்தம் வந்தது. இதைக் கண்டு பதறிய அப்பெண் இதுகுறித்து அருகிலிருந்தவர்களிடம் கூற அவர்கள் ரத்தம் வந்த இடத்தை பார்த்தபோது அங்கு ஒரு பாறையின் மேல் 5 தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது. அந்த நாகர் சிலையின் மேற்பகுதியிலிருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து அந்த நாகர் சிலைக்குப் பொதுமக்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டதும் ரத்தம் வருவது நின்றுவிட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் தொடர்ந்து தினமும் அந்த நாகர் சிலைக்குப் பால் அபிஷேகம் செய்து வந்தனர். இதனால் அவர்களது வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கின. இதைத் தொடர்ந்து நாகர் சிலைக்கு ஓலையால் வேய்ந்த குடிசை அமைத்து, நாகர் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர்.
ஒருமுறை தோல் நோயால் பாதிக்கப்பட்ட மார்த்தாண்டவர்மா, நாகராஜா கோயிலுக்கு வந்தார். அவர் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு பூரண குணமடைந்தார். இதனால் மனமகிழ்ந்த அரசன் அந்த இடத்தில் நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப ஓலைக் கூரையாலேயே அமைக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் இந்த கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்களே ஓலைக்கூரையைப் பிரித்து மீண்டும் புதிய கூரை வேய்கின்றனர்.இந்த கோயிலை நாகங்களே பாதுகாக்கின்றன. கருவறையில் நாகராஜர் 5 தலைகளுடன் சுயம்புவாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும் பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர்.
மூலவர் நாகராஜாவின் எதிரே உள்ள தூணில் நாக கன்னி சிற்பம் உள்ளது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. வயல் இருந்த இடம் என்பதால் இந்த இடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே கோயில் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மணல் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக்கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.
நாகராஜர் சன்னதிக்கு வலதுபுறத்தில் காசி விஸ்வநாதர், அனந்தகிருஷ்ணன், கன்னிமூல கணபதி சன்னதிகள் அமைந்துள்ளன. மூலவரான நாகராஜருக்கு தினமும் பூஜைகள் நடந்த பின்னர்தான் மற்ற சன்னதிகளில் பூஜைகள் நடைபெறும். அர்த்தஜாம பூஜை மட்டும் முதலில் அனந்தகிருஷ்ணருக்கு நடத்தப்படுகிறது. நாகராஜா கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் முக்கிய நுழைவாயில் தெற்கு நோக்கியே உள்ளது. இந்த வாசலை மகாமேரு மாளிகை என்று அழைக்கிறார்கள். இக்கோயிலின் மூலவர் நாகராஜா என்றாலும் அனந்தகிருஷ்ணர் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் உள்ளது.பெருமாள் கோயில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம், ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும் கருடனும் பகைவர்கள் என்பதால் கொடி மர உச்சியில் ஆமை இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஓடவள்ளி என்ற கொடிதான் இந்த ஆலயத்தின் தல விருட்சமாகும். இக்கோயிலின் வெளிப் பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது.ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜருக்கு பால் வார்ப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தக் கோயில் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். நாகராஜா கோயிலுக்கும் ஆயில்ய நட்சத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ராம அவதாரத்தில் லட்சுமணர் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தார். கிருஷ்ண அவதாரத்தின் போது அனந்தன் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தார். தற்போதைய கலியுகத்தில் நாகராஜா ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்ததாக ஐதீகம்.நாகராஜா கோயிலில் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று வழிபாடு செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆயில்ய நட்சத்திர தினத்தன்று முறைப்படி வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் தீரும் நம்பிக்கை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)