Navratri 2026: நவராத்திரி கொண்டாட்டம்.. 9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை.. நோட் பண்ணுங்க மக்களே!
நவராத்திரி என்றாலே பலரின் வீடுகளிலும் கொலு கண்காட்சி அமைத்திருப்பார்கள். கோயில்களிலும் இல்லங்களிலும் பக்தி இசை, சொற்பொழிவுகள் போன்றவை நடைபெறும்.

நவராத்திரி பண்டிகை இன்று முதல் தொடங்கும் நிலையில் 9 நாட்கள் பூஜை வழிபாட்டில் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றிக் காணலாம்.
நவராத்திரி கொண்டாட்டம்
முப்பெரும் தேவிகளான துர்க்கை, லட்சுமி, மற்றும் சரஸ்வதி ஆகியோரை ஒன்பது இரவுகள் போற்றி வழிபடும் நிகழ்வே நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தின் மிக முக்கியமான ஆன்மிக பண்டிகையான இது புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசைக்கு அடுத்த தினத்தில் தொடங்கும். இந்த 9 நாட்களின் முடிவில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தசரா பண்டிகை ஆகியவை கொண்டாடப்படும். 2026ம் ஆண்டு நவராத்திரி பண்டிகை அக்டோபர் 11ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பிரபஞ்சத்தின் மூன்று முக்கிய ஆற்றல்களைக் குறிக்கும் வகையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் 3 நாட்கள் தீமைகளையும் அறியாமையையும் அழிக்கும் வீரம் மற்றும் சக்தியின் வடிவமான துர்க்கை வழிபடப்படுகிறார். அடுத்த 3 நாட்கள் செல்வம், வளம் மற்றும் நற்பண்புகளை வழங்கும் அன்னையான லட்சுமி தேவி வழிபடப்படுகிறார். இறுதியான 3 நாட்கள் அறியாமை இருளை நீக்கி, ஞானம், கலை மற்றும் கல்வியை வழங்கும் தெய்வமான சரஸ்வதியை வழிபடுகிறார்கள்.
நவராத்திரி என்றாலே பலரின் வீடுகளிலும் கொலு கண்காட்சி அமைத்திருப்பார்கள். கோயில்களிலும் இல்லங்களிலும் பக்தி இசை, சொற்பொழிவுகள் போன்றவை நடைபெறும்.
9 நாட்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதவை
நவராத்திரியின் போது துர்கா தேவிக்குப் பழங்களைப் படைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் பேரிக்காய், உலர்ந்த தேங்காய், அத்திப்பழம் மற்றும் அன்னாசிப்பழம் ஆகியவற்றோடு எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களும் படைக்க வேண்டாம் என சொல்லப்படுகிறது. மேலும் பூச்சிகள் அரித்த, பழுக்காத, அதிக புளிப்பு மற்றும் கசப்பு கொண்ட பழங்கள், அடிபட்ட, பறவைகளால் உண்ணப்பட்ட பழங்களை படைக்க வேண்டாம். வாழைப்பழமாக இருந்தாலும் கூட பரவாயில்லை. நல்ல நிலையில் இருக்கும் பழங்களைப் படைக்க வேண்டும்.
அதேசமயம் அம்மன் வழிபாட்டின் போது சிவனுக்குரிய எருக்கம்பூ மற்றும் வாடிய, வாசனை இல்லாத மலர்களை சமர்பிக்க வேண்டாம். துர்க்கை தேவிக்கு மல்லிகை, முல்லை, செண்பகம் ஆகிய மலர்களும், லட்சுமி தேவிக்கு செவ்வரளி, பாரிஜாதம், செம்பருத்தி ஆகியவையும், சரஸ்வதி தேவிக்கு தும்பை, ரோஜா, வெள்ளை தாமரையும் படைக்கலாம்.
அதேபோல் பூஜை வழிபாட்டின்போது செம்பு, பித்தளை அல்லது மண் பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள். கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். படைக்கப்படும் உணவில் உப்பு, பூண்டு, வெங்காயம் ஆகியவை இருக்கக்கூடாது. அனைத்துப் பொருட்களும் புதியதாகவும் தூய்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்






















