கோனியம்மன் கோயில் தேரோட்டம் - சீர்வரிசை தந்த போலீசார், பக்தர்களுக்கு தண்ணீர் கொடுத்த இஸ்லாமியர்கள்!
கோனியம்மன் கோவை நகரின் காவல் தெய்வமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவை டவுன்ஹால் பகுதியில் கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோனியம்மன் கோவை நகரின் காவல் தெய்வமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி
தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நாள்தோறும் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் பவனி வந்து அனைத்து பக்தர்களுக்கும் காட்சியளித்து அருள் பாவித்தார். மேலும் தினமும் அம்மன் திரு வீதி உலாவும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றதை ஒட்டி, இன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இந்த தேர் திருவிழாவை காண கோவை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து சென்றனர். இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் அன்னதானம், நீர்மோர் குளிர்பானங்கள் ஆகியவற்றையும் வழங்கினர். இந்த நிலையில் வருடம் தோறும் கடை வீதி காவல் நிலையம் சார்பில் சீர் வரிசைகள் எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு வழங்கப்படும். அதன்படி இந்த வருடம் கடை வீதி காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா கோனியம்மனுக்கு சீர் வரிசைகளை எடுத்துச் சென்றார். முன்னதாக கோவில் நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு வந்து ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டினர். அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கடை வீதி காவல் துறையினர் பழங்கள், புடவைகள், பூமாலைகள் அடங்கிய சீர்வரிசைகளை எடுத்துச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கோனியம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ப க்தர்கள் வெள்ளத்தில் அம்மன் எழுந்தருளிய தேர் ராஜவீதியில் தேர்திடலில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்ப கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் தேர் திடலை அடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் மீது பக்தர்கள் உப்பினை வீசி வழிபட்டனர். கோனியம்மன் கோவில் மற்றும் தேர் திருவிழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி சென்றனர்.
இதனிடையே இந்த தேர் திருவிழாவில் பங்கேற்க வந்த பக்தர்களுக்கு டவுன்ஹால் பகுதியில் உள்ள கோயமுத்தூர் அத்தர் ஜமாத் பெரிய பள்ளிவாசல் சார்பாக தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. இன்று 10 ஆயிரம் இந்து பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கியதாகவும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், கோவையில் வரக்கூடிய இந்து முஸ்லிம் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை வெளிக்காட்டும் வகையிலும் தண்ணீர் பாட்டில்களை வழங்கியதாக பள்ளி வாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல டவுன்ஹால் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.