முருகப்பெருமான் கண் திறந்து பார்த்தாரா! விழுப்புரம் கோவிலில் இரவில் திரண்ட பக்தர்கள் - என்ன நடந்தது?
விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள தீய்ப்பாய்ந்தம்மன் கோவிலில் முருகப்பெருமானின் சிலை தொடர்பாகப் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள முருகன் கோவிலில் சுவாமி சிலையின் கண் திறந்து மூடியதாகத் தகவல் பரவியதால், அப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். முருகப்பெருமான் கண் திறந்து பக்தர்களுக்குக் காட்சியளித்ததாகப் பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறி, சுவாமி தரிசனம் செய்து வழிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஜபுரம் தீய்ப்பாய்ந்தம்மன் கோவில்
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட மகாராஜபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பிரசித்தி பெற்ற தீய்ப்பாய்ந்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளதுடன், முருகப்பெருமானுக்கும் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால், கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
முருகன் கண் திறந்ததாகக் கூறிய பெண்
இந்நிலையில், நேற்று (நவம்பர் 27) இரவு சுமார் 9 மணியளவில் கோவிலில் வழக்கமான வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது கோவிலுக்கு வந்திருந்த பெண்கள் சிலர் முருகப்பெருமான் சன்னதியில் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பக்திப் பாடல் பாடிக்கொண்டிருந்த பெண் ஒருவர், முருகப்பெருமானின் சிலையில் ஒரு கண் திறந்த நிலையில் இருப்பதைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். மேலும், முருகப்பெருமான் தன்னைப் பார்த்துக் கண் திறந்து காட்சியளித்ததாக அவர் பக்தி பரவசத்துடன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் கோவிலில் இருந்த மற்ற பக்தர்களிடையே வேகமாகப் பரவியது.
கோவிலில் குவிந்த பக்தர்கள்
இதையடுத்து, முருகப்பெருமான் சிலையின் கண் திறந்து மூடியதாகத் தகவல் பரவியதும், மகாராஜபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வரத் தொடங்கினர்.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் முருகப்பெருமானின் சிலையை ஆச்சரியத்துடன் பார்த்து, சுவாமி தரிசனம் செய்தனர். சிலையின் கண் திறந்து மூடியதாகவும், கண் திறந்த நிலையில் முருகப்பெருமான் காட்சியளித்ததாகவும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பலரும் முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்.
கார்த்திகை தீப வழிபாட்டின்போது பரபரப்பு
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில், முருகப்பெருமான் சிலையின் கண் திறந்ததாகப் பரவிய தகவல் பக்தர்களிடையே பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனால் மகாராஜபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இச்சம்பவம் குறித்து பக்தர்கள் தங்களது ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் கருத்துகளைப் பகிர்ந்து வரும் நிலையில், முருகப்பெருமான் சிலையின் கண் திறந்ததாகக் கூறப்படும் தகவல் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















