சீர்காழி அருகே வீடு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அகதிகளை விட மோசமாக வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கிராமத்தில் நரிக்குறவர்கள் மக்கள் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் சீர்காழி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வியாபாரம் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு அரசு புதிதாக வீடு கட்டி தருவதாக கூறி அவர்கள் ஏற்கனவே வசித்து வந்த பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இதனால் தங்குவதற்கு வீடு இன்றி இந்த மழை காலத்தில் மிகுந்த இன்னலுக்கு மத்தியில் தற்போது தார்ப்பாயில் டென்ட் அமைத்தும், அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையங்கள், கடை வாசல்களில் படுத்தும் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக நரிக்குறவ மக்கள்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையால் அரசு சார்பில் 30 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் இலவச வீடு கட்டி தருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இரண்டு வீடுகளை கட்டி பாதிலே பணியை நிறுத்தி விட்டு சென்று விட்டதாகவும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்களை அலைக்கழித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
வீடு, கழிவறை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் தாங்கள் அகதிகளை விட மோசமாக வாழ்ந்து வருவதாக கூறும் இப்பகுதி நரிக்குறவர் இன மக்கள், வெயில் காலங்களில் கூட வாழ்க்கையை கடந்து விடுவதாகவும், மழைக்காலத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். வீடுகள் இல்லாததால் பிள்ளைகளை படிக்க கூட அனுப்ப முடியாத நிலையில் இருந்து வருவதாகவும் வேதனைப்படுகின்றனர்.
கழிவறை இல்லாததால் பெண்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று இயற்கை உபாதைகளை கழித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு தமிழக அரசு விரைந்து வீடுகளை கட்டி, கழிவறை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக முதல்வருக்கு நரிக்குறவர் மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.