5 மாநில தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருந்தபோது தமிழ்நாட்டை நோக்கி இந்தியாவின் கடைகண்ணை திருப்பியிருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. வழக்கமாக அரசியல்வாதிகள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் இல்லங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தும் அமலாக்கத்துறை அலுவலகத்திலேயே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது பலரது புருவங்களை உயர்த்தி பார்க்க வைத்திருக்கிறது.
சிக்கிய ED அதிகாரி – பாய்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை
திண்டுக்கலில் அரசு மருத்துவர் ஒருவரிடம் 20 லட்சம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அமித் திவாரியை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. தமிழ்நாடு வரலாற்றில் எத்தனையோ மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எல்லா பக்கங்களிலும் பாய்ந்திருந்த நிலையில், பதுங்கியிருந்த புலி தன் இரை மீது பாய்வதுபோல் அமலாக்கத்துறை மீதே பாய்ந்து, நேற்று ஒரே இரவிலேயே 13 மணி நேரம் சோதனை நடத்தி அமலாக்கத்துறையை போட்டு பிராண்டி எடுத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரம் இருக்கிறதா..?
இந்த நேரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளை கைது செய்ய மாநில அரசின் புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் இருக்கிறதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அவரை விடுவிக்கக்கோரி போராட்டம் நடத்திய அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவையே கைது செய்து சிறையில் அடைத்தது தமிழ்நாடு போலீஸ்.
நீதிமன்றம் சொல்வது என்ன ?
இருந்தபோதும் விதிகளின்படி உரிமையும் அதிகாரமும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் இருக்கிறது என்றே ஆவணங்கள் சொல்கின்றன. ஏற்கனவே, மத்தியபிரதேசம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசு அதிகாரிகளை கைது செய்தபோது அதனை எதிர்த்து நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசுக்கு மத்திய அரசு அதிகாரிகளை கைது செய்ய அதிகாரம் இருக்கிறது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
விதிகளே சொல்கிறது – கைது செய்யலாம்
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையை பொறுத்தவரை அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெளிவுப்படுத்த தனியாக ஒரு கையேடே இருக்கிறது. ஒரு வழக்கில் சம்மன் எப்படி கொடுக்க வேண்டும் ? விசாரணை எப்படி செய்ய வேண்டும் ? சாட்சிகளை எவ்வாறு விசாரிக்கலாம் என்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
அந்த விளக்க குறிப்பில், மத்திய அரசு ஊழியர்கள் மீது லஞ்ச புகார் வந்தால் மாநில லஞ்ச ஒழிப்புத் துறை எப்படி செயல்பட வேண்டும் என்று தனியாக சொல்லப்பட்டிருக்கிறது. அதில்,
மத்திய அரசு ஊழியர்கள் மீது புகார் வரும் பட்சத்தில் அவர்களை பொறி வைத்து பிடிக்கலாம் என்றும் (Trap), பிடித்தபின்னர் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கு முன்னர் விசாரணை செய்யலாம்
சி.பி.ஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு அந்த வழக்கு குறித்து அவர்களோடு மாநில லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் கலந்தாலோசித்து, இந்த வழக்கின் மேற்படியான விசாரணையை சிபிஐ தொடர்கிறதா இல்லை மாநில புலனாய்வு அமைப்பே தொடரலாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் அந்த கையெட்டில் கூறப்பட்டிருக்கிறது. ஒருவேளை, தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்ட பின்னர், உடனடியாக சிபிஐ அதிகாரிகளை தொடர்புகொண்டு கலந்தாலோசிக்க முடியவில்லை என்றால், ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கு முன்னர் விசாரணையை மாநில புலனாய்வு அமைப்பே தொடரலாம் என்றும் விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரி அமித் திவாரி கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஆதாரங்களை சேகரிக்க மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.