புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 லட்சம் மின் கம்பங்கள், 15 ஆயிரம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

வங்ககடலில் புயல் உருவாகவுள்ள நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்வாரியம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்து சென்னை நுங்கம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ”புயல் முன்னெச்சரிக்கையாக  மின் வெட்டு ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்புயல் நேரத்தில் மின்கசிவு காரணமாக உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகள் அரசு அலுவலகங்கள் உள்ள இடங்களில் மின்சாரம் தடைப்படாமல் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். மாவட்டம் தோறும் இருக்கும் கட்டுப்பாட்டு மையங்களில் மின்சார துறை அலுவலர்கள் பொறியாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 3 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. 15600 பேர் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். கன மழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மழை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மின்னகத்திற்கு வரும் அழைப்புகளை உடனடியாக எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். எந்த இடத்தில் புகார்கள் அதிகளவில் வருகிறது என்பதை ஆய்வு செய்ய தெரிவித்துள்ளோம். 94 இடங்களில் மின் வாரிய வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழையின் அளவை பொறுத்து கூடுதலாக அலுவலர்கள் தேவைப்பட்டால் மற்ற மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

புயல் குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று, புதுச்சேரிக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே 510 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், பாபட்லாவில் இருந்து தெற்கு - தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து தெற்கு -தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இதனால் சென்னை உள்ளிட்ட வடகடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை உருவாகும் மிக்ஜாம் புயல் தீவிர அல்லது அதி தீவிர புயலாக மாறுமா என்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அது  புயலாகவே கரையை கடக்கும் என கூறப்படுகிறது.