சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘மாவீரன் கிட்டு’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் கடந்துள்ளது. ஸ்ரீதிவ்யா, ஆர்.பார்த்திபன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தலித் சினிமா என்கிற வகைமைகளில் தற்போது அதிகம் குறிப்பிடப்படும் இயக்குநர்கள் ரஞ்சித், மாரி செல்வராஜ். வெளிப்படையாக இல்லை என்றாலும் ஒரு ஜனரஞ்சக இயக்குநரின் படத்தில் தலித்திய பிரதிநிதித்துவம் இருந்த படங்கள் இயக்குநர் சுசீந்திரனின் படங்கள். வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் கபடியைப் பற்றிய படமாக தோன்றினாலும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் தலித் மக்களின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைகளை பதிவு செய்த திரைப்படம். அதே நேரத்தில் ஆதலால் காதல் செய்வீர், ஜீவா உள்ளிட்ட படங்கள் பொருளாதாரம் மற்றும் சாதிய அடுக்குகளால் ஏற்படும் விளைவுகளை மையமாக கொண்டிருந்தன. அவ்வப்போது மறைமுகமாகவோ முழுமை இல்லாமலோ வெளிப்பட்டுக் கொண்டு இருந்த இந்த அம்சங்களை முழுமையாக பேசக்கூடிய ஒரு படமாக வந்த திரைப்படம் தான் ‘மாவீரன் கிட்டு’. தன்னுடைய ஊரில் தன் சொந்த மக்களை சாதிய ஒடுக்குமுறைகளில் இருந்து விடுவிக்க எழுந்த ஒருவனின் கதையே மாவீரன் கிட்டு. கலெக்டர் ஆக வேண்டிய ஆசையுடன் இருப்பவர் கதாநாயகன் கிட்டு என்கிற கிருஷ்ணசாமி. தன்னுடைய ஊரில் இருக்கும் செல்வராசு என்பவரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு தன் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார் கிட்டு.

Continues below advertisement

கிட்டுவின் செயல்கள்  பிடிக்காத ஆதிக்க சாதியினர் அவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்கிற முயற்சியால் ஒரு கொலைக் குற்றத்தில் அவனை சிக்க வைக்கிறார்கள். பட்டியலின மக்கள் மீது ஆதிக்க ஆதியினரின் மதிப்பீடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு தன் உயிரையே பலி கொடுக்கிறார் கிட்டு.

சாதியத்யை இந்திய திரைப் பின்னணியில் இருந்து பேச முயற்சித்த படங்களில் குறிப்பிடத்தகுந்த ஒரு முயற்சி மாவீரன் கிட்டு. ஒரு பீரியட் டிராமாக அமைந்த மாவீரன் கிட்டு படத்தில் கதை சொல்லல் நேர்த்தியாக உருவாகி இருக்கலாம் என்பது ஒரு குறையாக இருக்கிறது. ஆனால் படத்தின் தோல்விக்கு உண்மையான காரணம் போதிய கவனம் படத்தின் மீது குவியாததுமே என்பதுதான் சினிமா ரசிகர்களின் கவலை!

Continues below advertisement