கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்ட மணல் குவாரிகள், விதிகளை மீறி அதிக அளவில் மணல் அள்ளியது குறித்து, துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஆற்றில் மாதிரிவேளூர், பாலுரான்படுகை, பட்டியமேடு ஆகிய இடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அரசின் மணல் குவாரி செயல்படுகிறது.
இங்கு அள்ளப்படும் மணல் குன்னம் என்ற இடத்தில் உள்ள யாடில் குவிக்கப்பட்டு, அங்கிருந்து லாரிகளுக்கு ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுங்கட்சி தலைமைக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் மணல் அள்ளி லாரிகளில் நிரப்பும் பணியை செய்து வந்தனர். லாரிகளில் ஏற்றப்படும் மணல் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்ற விதி முறையை மீறி நேரடியாக பணம் பெற்றுக் கொண்டு லாரிகளில் மணலை ஏற்றி அனுப்பி வைத்தனர். அது மட்டும் இன்றி அரசின் வழிகாட்டுதல் படியில்லாமல் ஆற்றில் பல அடி வரை ஆழத்திற்கு மணல் அள்ளி விற்பனை செய்து வந்தனர்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட்ட மூன்று இடங்களில் முப்பதுக்கு மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் டெம்போ மற்றும் இனோவா வாகனங்களில் வந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் சோதனையில் மணல் எடுக்கப்பட்ட இடம் அதன் பரப்பளவு ஆழம் ஆகியவை குறித்து அளவீடு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் முடிவில் முறைகேடாக எத்தனை யூனிட் மணல் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து தெரியவரும் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Bengaluru IT Raid: நள்ளிரவில் நடைபெற்ற திடீர் சோதனை.. காண்டிராக்டர் வீட்டில் சிக்கிய ரூ.42 கோடி..