40 ஆண்டுகளுக்குப் பின், நாகப்பட்டினம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையே சென்ற பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழிப் பாதை துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர்.


இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவங்க இரு நாட்டு அரசு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது. அதற்காக இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் கேரள மாநிலம் கொச்சியில் 25 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட் செரியா பாணி சுற்றுலா பயணிகள் கப்பல்  நாகை துறைமுகம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி நாகப்பட்டினம் துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. 




இதில் மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழிப் பாதை துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, வேலு, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் ராமச்சந்திரன், தமிழக துறைமுகங்கள் துறை கூடுதல் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆகியோர் காணொளி காட்சி மூலம் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்திய இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்தை காணொளி காட்சி வாயிலாக அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மத்திய மாநில அமைச்சர்கள் நாகை துறைமுகத்தில் கொடியசைத்து கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர். 


இந்த கப்பலில் 51 பயணிகள் இலங்கைக்கு பயணம் செய்தனர். 60 நாட்டிக்கல் தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்கும் கப்பல் இங்கிருந்து இலங்கை சென்று அதன் பின்னர் இலங்கையில் இருந்து மதியம் மீண்டும் நாகைக்கு புறப்படும்.


முன்னதாக நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி : 


தமிழகத்திற்கு இலங்கைக்கும் பண்டைய காலத்தில் இருந்து உறவு உள்ளது இதை சங்க கால இலக்கியமான பட்டின பாலை மணிமேகலை குறிப்பிட்டுள்ளது. சுப்பிரமணிய பாரதியார் சிந்து நாடு திசை என்ற பாடலில் இந்திய இலங்கை கப்பல் போக்குவரத்து குறித்து பாடியுள்ளார். இந்த சிறப்பு வாய்ந்த கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கும் வகையில் மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளிடையே உறவு வலுப்படும் பொருளாதார வளர்ச்சி அடையும் ராஜதந்திர உறவு வழி பெறும்.  நமது நாடு டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் அடைந்துள்ளது இது வணிகத்தின் வளர்ச்சிக்கு பயன்படும் என தெரிவித்தார்.




இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகம் திருச்சி சுங்கத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு பொருந்தும். கப்பல் போக்குவரத்து தொடங்கும் முதல் நாளான இன்று 75 சதவீத கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு கட்டணம் ரூ. 6 ஆயிரத்து 500 ஜிஎஸ்டி 18 சதவீதம் என மொத்த கட்டணம் ரூ. 7 ஆயிரத்து 670 ஆகும். 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2 ஆயிரத்து 375 ஜிஎஸ்டி 18 சதவீதம், என மொத்தமாக ரூ.2 ஆயிரத்து 803 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கப்பல் முதல் பயணத்தில் 50 பேர் முன்பதிவு செய்து செல்கின்றனர். கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அதிகமான நபர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 150 பயணம் செய்யக்கூடிய கப்பலில் 50 பயணிகள் செல்கின்றனர்.