நாகை - இலங்கை காங்கேசன் துறை பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். விழா மேடையில் இருந்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், எ.வ.வேலு, ரகுபதி கொடியசைத்து அனுப்பிவைத்தனர்.






இந்திய-இலங்கை இருநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க ஒப்பந்தமானது. இந்நிலையில், நாகையில் நடைபெற்ற விழாவில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர்  மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். விழா மேடையில் இருந்த, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் கொடியசைத்து கப்பலை வழியனுப்பி வைத்தனர்.






முன்னதாக காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, நாகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து இலங்கை உள்பட பல நாடுகளுக்கு வர்த்தக ரீதியாக தொன்று தொட்டே கப்பல் போக்குவரத்து இருந்ததாக குறிப்பிட்டார். பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களையும், பாரதியார் பாடலையும் அவர் மேற்கோள் காட்டினார்.


கப்பல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாகவும், கப்பலில் பயணம் செய்யும் போதும் உற்சாகமாக பேசிய பயணிகள், தங்களது நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளதாக உற்சாகமாக கூறினர். இந்த கப்பல் சேவையின் மூலம் இரு நாடுகள் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்டவை மேம்படும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


நாள் தோறும் நாகையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் 'செரியா பாணி' என்ற கப்பல், நண்பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையை சென்றடையும். மீண்டும் பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும். இந்த கப்பலில் பயணம் செய்ய 18 சதவீத ஜிஎஸ்டி உடன் சேர்த்து பயண கட்டணமாக ஒரு நபருக்கு 7 ஆயிரத்து 670 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் நாள் என்பதால் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நபருக்கு கட்டணம் ரூ. 3 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 150 பயணிகள் வரை பயணம்  மேற்கொள்ளும் வசதி உடைய கப்பலில் இன்று 50 பயணிகள் இலங்கை சென்றுள்ளனர். நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் தினசரி ஒருமுறை இந்த கப்பல் பயணம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் போக்குவரத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், மக்களின் நீண்டகால ஆசை நிறைவேறியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.