TVK Vijay: 6 மாசம்தான் .. ஆட்சியும், காட்சியும் மாறும் - கரூரில் விஜய் பரபரப்பு பேச்சு
இன்னும் 6 மாதத்தில் ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும் என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

கரூரில் பரப்புரையை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கரூர் அமராவதி ஆற்றங்கரை ஓரம் உள்ள ஊர். டெக்ஸ்டைலுக்கு மிகவும் முக்கியமான ஊர். கரூரைப் பற்றி பெருமையாக பேச நிறைய விஷயங்கள் உள்ளது. ஆனால், சமீபகாலமாக இந்தியாவிலே கரூர் என்று சொன்னாலே ஒரே ஒரு பெயர்தான் பேமஸா ஒலிக்கிறது. அதுக்கு யார் காரணம்? உங்களுக்கே தெரியும்.
பேரீட்சை:
கரூர் மாவட்டத்தில் வாக்குறுதிகள் எல்லாம் கொடுத்தார்கள்தானே. அது ஒரு சிறிய லிஸ்ட்தான். அதை பார்ப்போம். கரூர் மாவட்டத்தில் பேரீட்சை வளர்க்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வாக்குறுதி எண் 81. பேரீட்சை மரத்தை விடுங்க. பேரீட்சை விதையாவது கண்ணில் காட்டுனாங்களா?
கரூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி எண் 488. ஆட்சியே முடியப்போது. இப்போ போயி ஒன்றிய அரசிடம் அமைச்சர் கோரிக்கை வைக்கிறார். ஐயா அமைச்சரே இதுதான் உங்க டக்கா? ஏர்போர்ட் இங்கே கட்டினால் ஜவுளித்தொழில் நன்றாக வரும். கரூரில் விமான நிலையம் வந்தால் பரந்தூர் மாதிரி மக்கள் பாதிக்காத இடமாக பார்த்து ஏர்போர்ட் கட்டினால் நல்லது.
தீராத தலைவலி:
மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி. கரூரை வறண்ட மாவட்டமாக மாற்றியது. 11 மணிக்கு பதவியேற்றால் 11.05 மணிக்கு மணல் அள்ளலாம்னு ஓப்பனா சொன்னது உங்க ஆளுதானே? கரூரிடம் இருந்தும் காவிரி தாய்க்கும் விடுதலை வேண்டாமா? தமிழ்நாட்டின் 3வது பெரிய ஏரி பஞ்சப்பட்டி ஏரி. 6 ஆயிரம் ஏக்கருக்கு மேலே. பல வருஷமா அதை சரி செய்யாம கிடப்பில் போட்டு வச்சுருக்காங்க. நம்ம ஆட்சி வரும்போது பஞ்சப்பட்டி ஏரிக்கு உயிர் வரும்.
ஏடிஎம் இயந்திரம்:
இன்னொரு முக்கியமான பிரச்சினைக்கு காரணமானவரைப் பற்றி பேசாமல் இருந்தால் நல்லா இருக்குமா? கரூர் மாவட்டத்தில் மந்திரி மந்திரினு ஒருத்தர் இருந்தார். இப்போது மந்திரி இல்லை. மந்திரி மாதிரி. பாட்டிலுக்கு 10 ரூபாய். சமீபத்தில் கரூரில் ஒரு விழா நடத்தினார்கள். அது என்ன முப்பது பேர் விழாவா? முப்பெரும் விழா. முதலமைச்சர் மாஜி மந்திரியை புகழ்ந்து பேசியதை கேட்டோம் அல்லவா? இதே சிஎம் கரூரில் பேசும்போது என்னவெல்லாம் பேசினார்?
திமுக குடும்பத்திற்கு ஊழல் பண்ற பணத்தை 24 மணி நேரமும் டெலிவரி பண்ற ஏடிஎம் இயந்திரமாக அவர் இருக்கிறார். இன்னொரு முக்கியமான விஷயம் போலீஸ் பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளது. மக்கள்தான் எஜமானர்கள். மக்களுக்காகத்தான் பயப்பட வேண்டும். இன்னும் 6 மாசம்தான். ஆட்சி மாறும், காட்சி மாறும். அதிகாரம் கைமாறும். உண்மையான மக்களாட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி அமையும். நம்பிக்கையா இருங்க.
இவ்வாறு அவர் பேசினார்.
தவெக தலைவர் விஜய்யை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான தாெண்டர்கள் குவிந்தனர். நாமக்கல்லில் தனது பரப்புைரயை முடித்த விஜய் பின்னர் கரூருக்கு தனது பிரச்சார வேனிலே சென்றார். அவரது பிரச்சார வாகனத்தைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பின்சென்றனர்.
மேலும், விஜய் பேசிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த தொண்டர்களுக்கு தண்ணீர் வழங்கினார். மேலும், மயங்கி விழுந்த தொண்டரை அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்சையும் அழைத்தார். இந்த கூட்டத்தில் காணாமல் போன அஷ்மிகா என்ற சிறுமியையும் கண்டுபிடித்து தருமாறு விஜய் வேண்டுகோள் விடுத்தார்.





















