Draft PG Medical Regulation : முதுநிலை மருத்துவ சேர்க்கை வரைவை திரும்ப பெறுக - முதல்வர் ஸ்டாலின் கடிதம்
எம்பிபிஎஸ் முடித்த பிறகு மாணவர்கள் மருத்துவப் பணியை மேற்கொள்வதற்கென்று தனியான தேர்வை எழுதத் தேவையில்லை என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு - மு.க ஸ்டாலின்
மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழுள்ள முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே தொடர வலியுறுத்தியும், தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,
"தேசிய மருத்துவ ஆணையத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட முதுநிலை மருத்துவக் கல்லூரி வரைவுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன். இந்த வரைவு, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளின் 50% இடங்களுக்கான கலந்தாய்வில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் விதமாக அமைந்துள்ளது. மாநில அரசுகள் தான் முதுநிலை மருத்துவக் கல்விக்கான கட்டமைப்பை உருவாக்குகின்றன என்ற நிசத்தமான உண்மையை ஒன்றிய அரசும், தேசிய மருத்துவ ஆணையமும் உணர வேண்டும்.
இந்த வரைவு மசோதா, அதன் நிறுவனச் சட்டமான தேசிய ஆணைய சட்ட வழிமுறைகளுக்கு எதிராக உள்ளது. குறிப்பாக, 11.2 பிரிவின் கீழ், சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநர் தான் அகில இந்திய தொகுப்பிற்கும், மாநிலங்களின் சொந்த இடங்களுக்கும் கலந்தாய்வை மேற்கொள்ளும் அதிகாரம் பெற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழுள்ள முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே தொடர வலியுறுத்தியும், தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மாண்புமிகு @mansukhmandviya அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். pic.twitter.com/iWZi7O22UI
— M.K.Stalin (@mkstalin) July 31, 2021
இது, 2019 வருட தேசிய ஆணைய சட்டத்தின் 15வது பிரிவுக்கு முற்றிலும் எதிரானது. இந்த பிரிவின் கீழ், மாநில அளவிலான அதிகாரம் பெற்றவர் மூலம் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்களுக்கான கலந்தாய்வு மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவக் கல்வி முடித்த பின், மருத்துவப் பணியை மேற்கொள்வதற்கான உரிமம் பெறுவதற்கென்று தனியாகத் தேர்வு நடத்துவதையும், அதை முதுகலை படிப்பிறகு கட்டயாமாக்கும் முயற்சியை இந்த வரைவு முன்னெடுக்கிறது. தமிழ்நாடு அரசு நீண்ட நாட்களாக தேசிய எக்சிட் தேர்வை (NExT) கொண்டுவரும் முயற்சிகளை எதிர்த்து வருகிறது. எம்பிபிஎஸ் முடித்த பிறகு மாணவர்கள் மருத்துவப் பணியை மேற்கொள்வதற்கென்று தனியான தேர்வை எழுதத் தேவையில்லை என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. எனவே, தமிழ்நாடு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்துள்ளது.
இடஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்றி, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய முறையில் மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தி வருகிறோம். தற்போதைய நடைமுறையின் கீழ், மாணவர்கள் கிராமப்புறங்களிலும், பின்தங்கிய பகுதிகளிலும் மக்களுக்காக சேவையாற்ற தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, முன்மொழியப்பட்ட வரைவு நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்கக் கூடும்.
எனவே, மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழுள்ள முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். மேலும், முதுநிலைப் படிப்புகளுக்கு, தேசிய அளவில் நடத்தப்படும் பொதுவான தகுதி தேர்வை (NEXT) அடிப்படை தகுகியாக நடத்த தீர்மானிக்கக்கூடாது. முதுகலை மருத்துவக் கல்வி வரைவு இந்திய கூட்டாச்சியின் அடிப்படை தத்துவத்தில் கை வைப்பதாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்தார்.