Schools Colleges Holiday: வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Schools Colleges Holiday: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டிஅதிக கனமழை பெய்து வருகிறது.
இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி மறுகால் பாய்கிறது. மேலும் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. எங்கு திரும்பினாலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவு போல காட்சியளிப்பதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 80க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 81485 39914 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் மக்கள் தொடர்பு கொள்ள எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலிக்கு 1077, 0462 2501012 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 1077, 0461 2340101 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
இந்த கனமழை, தென்மாவட்டங்களில் இன்று வரை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நாளை பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் முதலில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
மீட்பு பணிகள் தீவிரம்:
தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள நிலையில், முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 80க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இந்திய இராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாததிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, நெல்லையில் 2,723 பேரும், குமரியில் 517 பேரும், தூத்துக்குடியில் 4,056 பேரும், தென்காசியில் 138 பேரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.