”12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டிப்பாக நடத்தவேண்டும்” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகத்துடனான ஆலோசனையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த ஆண்டு முதல் முறையாக செயல்படவில்லை. கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, மீண்டும் பள்ளிகள் இந்தாண்டு தொடங்கப்பட்டது முதல் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு, கொரோனா பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக மாணவர்களின் கல்வி நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு, அவர்களின் உயர்கல்வி குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் இன்று நாட்டில் உள்ள அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியது. காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, கல்வித்துறை அமைச்சர்கள் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “நீட் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு தனியாக நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுவதைப்போல, மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நீங்களே தேர்வு நடத்துங்கள்.
மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நாங்களே தேர்வு நடத்திக் கொள்கிறோம் என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளேன். அந்த கோரிக்கை எந்தளவிற்கு ஏற்கப்படும் என்று போகப்போகத்தான் தெரியும். தமிழக முதல்வர் தனது தேர்தல் அறிக்கையிலே, நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளார். சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றி கடந்த ஆட்சியில் அனுப்பினோம். அது நடைமுறைக்கு வரவில்லை. முதல்வருடன் நானும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளோம். புதிய கல்விக்கொள்கையை ஏற்பதில்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ளோம்” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “12-ஆம் வகுப்பு தேர்வு குறித்து ஜூலையில் நடத்தலாம், ஆகஸ்டு மாதம் நடத்தலாம் என்று ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு ஆலோசனை வழங்கியுள்ளனர். நாம் ஆலோசனை நடத்திவிட்டு அதுகுறித்து முடிவு எடுப்போம். அனைவரும் ஆல் பாஸ் என்று சொல்லிவிட்டு செல்வது சுலபம். ஆனால், இது மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது. எதிர்காலத்தில் உங்களது மாநிலத்தில் அளிக்கப்பட்ட ஆல் பாஸ் முறையை ஏற்றுக்கொள்ள முடியாத என்று ஐ.ஐ.டி.யோ அல்லது ஐ.ஐ.எம். நிறுவனமோ கூறிவிட்டால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்” என்றார்
மேலும், ”தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தியே தீர வேண்டும் என்றும், இது மாணவர்களில் எதிர்காலம் தொடர்புடையது என்றும் கூறியுள்ளன.12-ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண்களை பொறுத்தே அவர்கள் கல்லூரியில் சேர்வதும், வேலைக்கு செல்வதும் தீர்மானிக்கப்படுகிறது. இதனால், கண்டிப்பாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தவேண்டும் என்பதுதான் அனைத்து மாநிலங்களின் கருத்து ஆகும். இதே கருத்தைதான் நமது முதல்வரும் வலியுறுத்தியுள்ளார்” என்று கூறினார்