”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
”மூத்த அமைச்சர், கனிம வளத்துறையின் முக்கிய அதிகாரி, ஆடிட்டர் கூட்டணியால் மீண்டும் மணல் கான்ட்ராக்ட் ராமசந்திரன் உள்ளிட்டவர்களுக்கு செல்ல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன”
தமிழ்நாட்டில் மணல் என்றாலே கரிகாலன், எஸ்.ஆர்.ராமசந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோர் தான் பேமஸ். அதிமுக ஆட்சியில் பல்வேறு மணல் மற்றும் மணல் தொடர்புடைய ஒப்பந்தங்கள் இந்த குருப்பிற்கே கிடைத்துவந்தது. திமுக ஆட்சி அமைந்த பிறகு மூத்த அமைச்சர் ஒருவரின் ஆசியால் இந்த மூவருமே மணல் வியாபாரத்தில் கொடிக் கட்டி பறந்து வந்தனர். அரசு விதிமுறைகளை மீறி மணலை முறைகேடாக எடுப்பது, விற்பது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது இருந்த காரணத்தால், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில் தற்போது இந்த மூவரிடமிருந்த மணல் ஒப்பந்தங்கள் வேறு ஒரு குழுமத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.
போன கான்ட்ராக்டை பிடிக்கனும் – ஆக்ஷனில் இறங்கிய மும்மூர்த்திகள்
இந்நிலையில், இதில் அதிருப்தி அடைந்த கரிகாலன், ராமசந்திரன், ரத்தினம் ஆகிய மணல் மும்மூர்த்திகள் குருப், மீண்டும் இந்த காண்ட்ராக்டை பெற்றுவிட வேண்டும் என்றும் தங்களை மிஞ்சி மணல் வியாபாரத்தில் வேறு யாரும் தமிழ்நாட்டில் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தற்போது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ராமசந்திரன் அதிதீவிரமாக மீண்டும் மணல் வியாபாரத்தை கையெலெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, கனிம வளத்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் ஆதரவால் மீண்டும் இந்த மணல் ஒப்பந்தங்களை தங்களுக்கே வழங்க வழிவகை செய்யுமாறு முதல்வர் அலுவலகம் வரை இந்த குருப் சென்றிருப்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
கனிமவளக் கொள்ளை, வரி ஏய்ப்பு, ரெய்டு
முறைகேடாக அரசு ஒப்பந்தங்களை பயன்படுத்தி கனிம வளங்களை கொள்ளையடித்தது, பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது, சட்டவிரோத பணபரிமாற்றம் செய்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இந்த மணல் மும்மூர்த்திகள் மீது இருப்பதாலும் மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறையின் வளையத்தில் இருப்பதாலும் மணல் ஒப்பந்தங்களை வேறு ஒரு குழுமத்திற்கு மாற்றிக் கொடுக்க முதல்வரின் ஒப்புதலுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுமதி வாங்கினர். ஏனென்றால், இவர்கள் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளால், பல்வேறு மாவட்ட ஆட்சியர்களாக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. இது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மணல் விவகாரத்தில் இருந்து விலகிய கரிகாலன், ரத்தினம்
இந்நிலையில், அமலாக்கத்துறையின் கிடுக்குப்பிடி, தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்ன் கோப பார்வை காரணமாக கரிகாலனும், ரத்தினமும் தற்காலிகமாக மணல் வியாபாரத்தில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருந்து வருகின்றனர். ஆனால், ராமசந்திரன் மட்டும் தற்போது இந்த ஒப்பந்தங்களை பெற முயற்சித்து மற்ற இருவரையும் களத்திற்கு அழைத்து வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உளவுத்துறை முதல்வர் அலுவலகத்திற்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மணல் மாஃபியாவுக்கு உதவுகிறாரா ஆடிட்டர் ?
இந்நிலையில், மீண்டும் ராமசந்திரன் உள்ளிட்டோர் வசம் மணல் ஒப்பந்தங்கள் செல்ல ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு மிக்க முருக கடவுள் பெயரை கொண்ட ஆடிட்டர் ஒருவர் இவர்களுக்கு உதவி வருவதாகவும், தான் சொன்னால் முதல்வர் அலுவலகத்தில் இருக்கும் அனைவருமே கேட்பார்கள் என்ற ரீதியில் டீல் பேசி வருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.