TN Headlines Today: 


 ”தெற்கிலிருந்து இந்தியாவிற்கான குரல்” - பாட்காஸ்டில் பேசுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..


இந்தியாவிற்கான பேச்சு என்ற தலைப்பில் பாட்காஸ்டில் பேச உள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசி, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அந்த வீடியோவில், “ செக்..1..2..3... ஆரம்பிக்கலாங்களா..! வணக்கம்.  கடந்த சில மாதங்களாக உங்களில் ஒருவன் என்கிற தலைப்பில் கேள்வி பதில் வடிவத்தில் பல்வேறு விவகாரங்களை உங்களிடம் பகிர்ந்துகொண்டேன். திராவிடம் முன்னேற்றக் கழகம் 75-வது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி. அண்ணா, கருணாநிதி என இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால் உருவாக்கப்பட்ட உடன்பிறப்புகள் தான் நாங்கள்.மேலும் வாசிக்க


சென்னையின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் சூப்பர் திட்டம்..


சென்னையில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியில் "ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை" என்ற அமைப்பின் நீர் சமநிலை முன்மாதிரி திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும், இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.  நீர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட பல்துறை குழுவாக "ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை" அமைப்பு உள்ளது. நீர் சமநிலைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை காது கேளாதோர் மற்றும் பார்வை திறனற்றவர்களுக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியில் மாதிரி திட்டத்தை இந்த அமைப்பு தொடங்கி உள்ளது.மேலும் வாசிக்க..


இன்று நள்ளிரவு முதல் 28 சுங்கச்சாவடிகளில் அதிரடியாக உயரும் கட்டணம்.. 


நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் (NHAI) உள்ள 816 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அதில், தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் இன்று இரவு முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.    கிடைத்த தகவலின்படி, ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இரு முறை கட்டணம் உயர்த்தப்படும். அதில், முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படும்.மேலும் வாசிக்க..


ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம்..- தமிழ்நாடு அரசின் 75 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்


திருவள்ளுவர் விருது உள்ளிட்ட 75 விருதுகளுக்கு அக்.15ஆம் தேதிக்குள் தமிழறிஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. விருது பெறுவோருக்கு ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும். இலக்கிய மாமணி விருது 3 பேருக்கு வழங்கப்படும். இதில், ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை பொன்னாடை அடங்கும். தமிழ் வளர்ச்சித் துறைசார்பில் தமிழ்த் தாய் விருது ஒருவருக்கு  வழங்கப்படுகிறது. அவருக்கு ரூ.5 லட்சம், கேடயம், தகுதியுரை வழங்கப்பட உள்ளது.மேலும் வாசிக்க..


எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது


உத்தவ் தாக்ரே சிவசேனா பிரிவு மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இன்று ஆலோசனையில் ஈடுபட்டு விருந்தில் பங்கேற்கும் தலைவர்கள், நாளை முறைப்படியான கூட்டத்தை நடத்துவார்கள்.மேலும் வாசிக்க..


மெட்ரோ சேவையில் மாற்றம்


சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பல தரப்பட்ட பொதுமக்களும் அவதியடைந்துள்ளனர்.நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சின்னமலை ரயில் நிலையத்தில் இருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை ஒற்றைப் பாதையில் ரயில் இயக்கப்படுகிறது. மேலும் விம்கோ நகர் பணிமணையில் இருந்து நீல நிற வழித்தடத்தில் உள்ள சின்னமலை ரயில் நிலையம் வரை வழக்கமான சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.மேலும் வாசிக்க..