முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
இந்தியாவிற்கான பேச்சு என்ற தலைப்பில் பாட்காஸ்டில் பேச உள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் அறிவிப்பு:
உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசி, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அந்த வீடியோவில், “ செக்..1..2..3... ஆரம்பிக்கலாங்களா..! வணக்கம். கடந்த சில மாதங்களாக உங்களில் ஒருவன் என்கிற தலைப்பில் கேள்வி பதில் வடிவத்தில் பல்வேறு விவகாரங்களை உங்களிடம் பகிர்ந்துகொண்டேன். திராவிடம் முன்னேற்றக் கழகம் 75-வது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி. அண்ணா, கருணாநிதி என இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால் உருவாக்கப்பட்ட உடன்பிறப்புகள் தான் நாங்கள்.
தற்போது இந்தியாவிற்காக பேசவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 2024ல் முடியப்போகிற பாஜக ஆட்சி, இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைத்து இருக்கிறது. எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ சகோதரத்துவ இந்தியா குறித்து ஒரு ஆடியோ சீரிஸில் பேச உள்ளேன். அதற்கு #Speaking4India என தலைப்பு வெச்சுக்கலாமா. தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
பாட்காஸ்டில் ஸ்டாலின்:
இதுதொடர்பான திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “சமூகநீதி, மதச்சார்பற்ற அரசியல், சமதர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சிக் கருத்தியல் ஆகியவை உள்ளதே இணையற்ற இந்தியா. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல் உள்ளிட்டவையெல்லாம், பலவகைப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவை உருக்குலைக்கும் நச்சுக் கருத்துகள். குமரி முதல் இமயம் வரையிலான பரந்து விரிந்த இந்திய நாட்டைக் காப்பாற்றும் கடமை நம் அனைவர் கைகளிலும் இருக்கிறது என்ற நோக்கோடு, பாரதீய ஜனதா கட்சி ஆட்சியின் அலங்கோலங்களை அம்பலப்படுத்தியும், பன்முகத்தன்மை கொண்ட, வலுவான மாநிலங்கள் கொண்ட, மதச்சார்பற்ற இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்தும், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், Podcast (குரல்பதிவுத் தொடர்) வடிவில், Speaking for India என்ற தலைப்பில் பேச இருக்கிறார். இத்தொடர் ஆங்கிலத்திலும், இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து I.N.D.I.A கூட்டணி உருவாகியுள்ளது. இந்த சூழலில் தான் பாஜகவின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் புதிய பாட்காஸ்ட் தொடரை வெளியிட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கவுன்டர் அட்டாக்:
இதனிடையே, பிரதமர் மோடி ஏற்கனவே மனதின் குரல் என்ற தலைப்பில் ரேடியோ வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்றும் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் மோடி பேசி வருகிறார். இந்நிலையில் தான் அதற்கு போட்டியாக முதலமைச்சர் ஸ்டாலின், #Speaking4India என்ற தலைப்பில் புதிய பாட்காஸ்ட் சீரிஸை தொடங்கியுள்ளார். அதேநேரம், இது எப்போது முதல் ஒலிபரப்பாகும் என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை.