சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பல தரப்பட்ட பொதுமக்களும் அவதியடைந்தனர்.சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ரயில் சேவை சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மெட்ரோ ரயில் சேவை


 சென்னையில் பொதுமக்களின் போக்குவரத்துக்கான சாதனங்களில் மிகப்பெரிய பயனாக அமைந்துள்ளது மெட்ரோ ரயில் சேவை. விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், செயின்ட் தாமஸ் மவுண்ட் முதல் சென்னை சென்ட்ரல் ரயில் வரையிலும் இரு வழிகளிலும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பயணிகளின் எண்ணிக்கைகேற்ப சில நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. 






பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் செல்பவர்கள் குறித்த நேரத்தில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள பெரும்பாலும் மெட்ரோ ரயில்களையே பயன்படுத்துவதால் எப்போதும் அனைத்து ரயில் நிலையங்களும் பரபரப்பாகவே காணப்படும். இதனிடையே அவ்வப்போது மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்படும். 




ரயில் சேவை பாதிப்பு 


இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து வந்தது. அதில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சின்னமலை ரயில் நிலையத்தில் இருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை ஒற்றைப் பாதையில் ரயில் இயக்கப்படுகிறது. மேலும் விம்கோ நகர் பணிமணையில் இருந்து நீல நிற வழித்தடத்தில் உள்ள சின்னமலை ரயில் நிலையம் வரை வழக்கமான சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.


அதேசமயம் வழக்கமான ரயில் சேவைகள் பச்சை நிற வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.  அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் இடையே ஷார்ட் லூப் சேவை திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால் பல தரப்பட்ட பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 




இதற்கிடையில் மெட்ரோ ரயில் சேவை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் நிர்வாகம் தெரிவித்தது. காலை 09:32 மணி முதல் 20 நிமிடங்களுக்கு விமான நிலையம் முதல் சின்னமலை வரை மெட்ரோ ரயில் சேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த தொழில்நுட்ப கோளாறை அதிகாரிகள் போராடி சரி செய்தனர். 


இந்நிலையில், நீல நிற வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.சின்னமலை மற்றும் விமான நிலையத்திற்கு இடையேயான தொழில்நுட்ப சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது. பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் திட்டமிட்டபடி இயக்கப்படுகின்றன. அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு மெட்ரோ நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.