கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது கோவை மாநகர பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நொய்யல் நதியை மீண்டும் புனரமைக்க வேண்டும் நொய்யல் பெருவிழாவை நடத்தி வருகின்றனர். அதனுடைய நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருக்கிறேன். நீர் நிலைகளை காப்பாற்றாமல், நிலத்தை காப்பாற்ற முடியாது. நீர் நிலைகளை காப்பாற்றாமல், சுற்றுப்புற சூழலை காப்பாற்ற முடியாது என்கிற அடிப்படையில் அவர்கள் எடுத்திருக்கிற பெரும் முயற்சிக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.


மாநில அரசு மற்றும் ஆளுநருக்கு இடையேயான மோதல் போக்கு குறித்த கேள்விக்கு, ”இது யாருடைய தவறு என்பதை பார்க்க வேண்டும். ஆளுநர்களை அரசியல் பக்கம் இழுக்கிறார்களா? அல்லது ஆளுநர்கள் அரசியல் பக்கம் சாய்கிறார்களா என்பதுதான் கேள்வி” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “நீட்டைப் பொறுத்தவரை யார் கொண்டு வந்தார்கள் என்பதும் தெரியும். நீட் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது என்பதும் தெரியும். தேவையில்லாமல் ஆளுநரை விமர்சிக்கின்ற போக்கை ஆளுங்கட்சியினர் கைவிட வேண்டும். அப்போதுதான் ஆளுநர்கள் அரசியலில் தலையிடுவது போன்ற சூழல் உருவாகாமல் இருக்கும். அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் ஆளுநரை குறை கூறுவதும் ஆளுநரை குறைத்து பேசுவதும் தான் தங்களுடைய அரசியல் என்ற புதிய போக்கை ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய மாநில அரசு கடைபிடிப்பது சரியான அணுகுமுறை அல்ல. மாநில அரசு இதனை விட்டுவிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.


ஆளுநருக்கு இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்துகின்ற அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. நீட் குறித்து ஏன் ஆளுநரை குறை சொல்கிறார்கள்? உச்ச நீதிமன்றம் ஏன் செல்ல மறுக்கிறார்கள்? தமிழக அரசு ஆளுநர் தவறு செய்கிறார் என நினைத்தால் தாராளமாக உச்ச நீதிமன்றம் செல்லலாமே? நீட் குறித்து ஏன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலாக்க வேண்டும் என்பதற்காக ஆளுநரை அரசியலுக்குள் இருப்பது தான் அரசியல் போக்காக உள்ளது. ஏழை மக்களின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்து இருப்பது எல்லோராலும் வரவேற்கப்படுகிறது. நானும் வரவேற்கிறேன். எதிர்க்கட்சியினர் விமர்சிக்க தான் செய்வார்கள்.


நான் ஆளுநராக இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீட் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தான் மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாக உள்ளது. செய்ய முடியாததை செய்வதாக சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆளுநரை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் அவர்கள் தமிழகத்தில் போட்டியிட்டால் எல்லோரும் வரவேற்பார்கள். நானும் முன் நின்று வரவேற்பேன். சுங்க கட்டணம் உயர்வுக்குப் பின்பு எத்தனை புதிய, பெரிய சாலைகள், நான்கு வழி சாலைகள் வந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். கட்டணத்தை மட்டும் பார்க்கக்கூடாது. இதற்கு முன்பாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு எவ்வளவு நேரம் செலவானது? இப்போது எவ்வளவு நேரம் செலவாகிறது? என்பதை பார்க்க வேண்டும். ஒரு பொருளை விரைவாக எடுத்துச் செல்லுவதில் தான் நமது வியாபாரத்தை பெருக்க முடியும். மத்திய அரசு எடுத்துக் கொண்டிருக்கிற மகத்தான பணிகளில் ஒன்று சாலைகளை விரிவாக்குவதும் அதை சர்வதேச தரத்தில் உயர்த்துவதாகும்” எனத் தெரிவித்தார்.